அரியானா கொள்ளையர்கள் 5 பேரையும் திருச்சூர் போலீசார் காவலில் எடுக்க முடிவு: 3 ஸ்டேஷன்களில் தனித்தனி வழக்குகள் பதிவு

2 months ago 21

சேலம்: சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அரியானா கொள்ளையர்கள் 5 பேரையும் திருச்சூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூரில் மாப்ராணம், கோலழி, சொராணூர் ரோடு ஆகிய இடங்களில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான 3 ஏடிஎம்களை கடந்த 27ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்து வந்த கொள்ளை கும்பல் உடைத்து, ₹67 லட்சம் பணத்தை கொள்ளையடித்தது. தகவலறிந்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ தலைமையிலான போலீசார், சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினார். அதில், கொள்ளையில் ஈடுபட்டது அரியானா கொள்ளையர்கள் என்றும், அவர்கள் தமிழகம் வழியாக தப்பி செல்வதும் தெரியவந்தது. உடனே தமிழக போலீசாரை உஷார்படுத்தினர். இதன்பேரில் நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு அரியானா கொள்ளை கும்பலை மடக்கி பிடித்தனர். அதில், தப்பியோட முயன்ற ஜூமாந்தின் (37) என்கவுன்டர் செய்யப்பட்டான். மற்றொரு கொள்ளையன் ஹஸ்ரு (எ) அஜர்அலி (28) குண்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். இதுபோக அரியானாவை சேர்ந்த இர்பான் (32), சவுக்கீன்கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26), முபாரக் (18) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த 5 கொள்ளையர்களையும் திருச்சூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முறைப்படி கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதில், மாப்ராணத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளையை குறித்து இரிஞ்சாலக்குடா போலீசாரும், திருச்சூர் ெசாராணூர் கொள்ளை குறித்து கிழக்கு போலீசாரும், கோலழியில் நடந்த கொள்ளை குறித்து விய்யூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த 3 ஸ்டேஷன்களில் பதிவாகியுள்ள வழக்குகளில் தனித்தனியே சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இர்பான், சவுக்கீன்கான், முகமது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய 5 பேரையும் கைது செய்யவுள்ளனர். இதற்காக அந்த 3 ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார், சேலம் வந்து மத்திய சிறையில் உள்ள 5 பேரையும் சிறையில் இருக்கும் நிலையிலேயே (பார்மல் அரஸ்ட்) கைது செய்ய இருக்கின்றனர். தொடர்ந்து திருச்சூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, 5 கொள்ளையர்களையும் காவலில் எடுத்து சென்று திருச்சூரில் வைத்து விசாரிக்கவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் அம்மாநில போலீசார் செய்து வருகின்றனர்.

இதனிடையே ஏடிஎம் கொள்ளை தொடர்பாக திருச்சூரில் நடந்த முதற்கட்ட விசாரணையில், ஒவ்வொரு ஏடிஎம்மிலும் கொள்ளையை 10 நிமிடத்திற்குள் முடித்துள்ளனர். இதற்காக நன்கு பயிற்சி எடுத்துள்ளனர். மிகவும் மேம்பட்ட மற்றும் இரும்பை உடைக்க ஏற்ற வகையிலான காஸ் கட்டர்களை பயன்படுத்தியுள்ளனர். ஏடிஎம் இயந்திரங்களை உடைக்கும் நேரத்தில் எஸ்பிஐ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் ஹீட் சென்சார் இருப்பதால், காஸ் கட்டரின் வெப்பத்தை உணர்ந்தால் அலாரம் அடிக்கும். சென்சார் வங்கிகளுடன் இணைக்கப்பட்டிருந்ததால், திருட்டு தகவல் நிகழ்நேரத்தில் தெரியவரும். இப்படித்தான் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதில், மாப்ராணம், கோலழியில் 20 நிமிடங்களில் அலாரம் கேட்டுள்ளது. ஆனால், சொராணூர் ரோடு ஏடிஎம் உடைக்கப்பட்டு, ஒரு மணி நேரம் கழித்துதான் திருச்சூரில் அலாரம் கேட்டுள்ளது. அந்த இயந்தில் பழுது இருந்துள்ளது என விசாரணையில் ெதரியவந்துள்ளது. சேலத்தில் இருந்து அரியானா கொள்ளையர்கள் 5 பேரையும் காவலில் எடுக்கும் போது, அவர்களிடம் விசாரணை நடத்த சிறப்பு தனிப்படையை அமைக்க இருப்பதாக திருச்சூர் கமிஷனர் இளங்கோ தெரிவித்துள்ளார். இதனால், இன்னும் ஓரிரு நாளில் சேலம் சிறையில் இருக்கும் 5 கொள்ளையர்களும் திருச்சூர் போலீசாரால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

The post அரியானா கொள்ளையர்கள் 5 பேரையும் திருச்சூர் போலீசார் காவலில் எடுக்க முடிவு: 3 ஸ்டேஷன்களில் தனித்தனி வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article