அரிமளம் அருகே சேறும் சகதியுமான சாலையால் மாணவர்கள் அவதி சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

4 hours ago 2

 

திருமயம்,நவ.23: அரிமளம் அருகே சேரும் சகதியுமாக மாறிய சாலையால் மாணவர்கள், கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் வழியாக ஏம்பல் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து தெற்கு சமுத்திராப்பட்டி செல்லும் கிராம சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை சமுத்திராப்பட்டி, தெற்கு சமுத்திராப்பட்டி, இடையன்காடு, குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட சாலை 20 ஆண்டுகளுக்கு முன்னர் புனரமைப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை சரிவர பராமரிக்கப்படாததாலும், புனரமைப்பு செய்யப்படாதாலும் சாலையின் பெரும் பகுதி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனைத் தொடர்ந்து தற்போது அப்பகுதியில் பருவ மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அதேசமயம் சாலையில் வாகனங்கள் பயணிப்பதால் சாலையில் தேங்கிய மழை நீர் சேறும் சகதியுமாக மாறி அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், முதியோர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சாலையை புனரமைப்பு செய்ய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பழுதடைந்த சாலையை சரி செய்ய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பழுதடைந்து சாலையை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த தெற்கு சமுத்திராப்பட்டி சாலையை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரிமளம் அருகே சேறும் சகதியுமான சாலையால் மாணவர்கள் அவதி சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article