சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளில், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025- 2026 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு சேர்க்கை படிவத்தை வழங்கி, மாலை அணிவித்து கல்வி கற்க வரவேற்றார்.
மேலும், தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மழலை குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கல்வி ஒன்றே யாராலும் அழிக்க முடியாது சொத்து என்பதை சொல்லாலும் – செயலாலும் நாள்தோறும் உறுதிப்படுத்தி வரும் நம் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய பிறந்த நாளை மாணவச் செல்வங்களுடன் கொண்டாடிடும் வகையில் நம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார்.
இப்பள்ளியில் 2025 – 2026 கல்வி ஆண்டில் சேருகின்ற மாணவ மழலைகளின் சேர்க்கைச் சான்றிதழ்களை வழங்கி அவர்களை வாழ்த்தினார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர்களும் ‘அப்பா’ என்று அன்போடு அழைக்கும் நம் முதலமைச்சர் ஸ்டாலினை லேடி வில்லிங்டன் மாணவச் செல்வங்களுடன் இணைந்து வாழ்த்தி மகிழ்ந்தோம். நம் முதலமைச்சர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
The post அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.