புதுச்சேரி, ஜன. 12: இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரியில் அரசு வேலை வாங்கித்தருவதாக போலி பணி ஆணை வழங்கி 12 பேரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (43). இவர் காங்கிரஸ் மாநில சிறப்பு அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அருள் (எ) அருள்ராஜ் என்பவர் அறிமுகமாகி பேசியுள்ளார். அப்போது அருள் தான் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் உயர்ந்த பதவியில் இருப்பதாகவும், செவிலியர் மற்றும் அட்டண்டர் வேலைக்கு ஆட்கள் எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் 15 நபர்களுக்கு பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக வெங்கடாசலபதியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடாசலபதி, வேல்முருகன் என்பவருக்கு வேலைக்காக ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். மேலும் வெங்கடாசலபதி அவருக்கு தெரிந்த 11 பேரை அழைத்து இதுசம்பந்தமாக பேசியுள்ளார். இதனை நம்பி 11 பேரும் தலா ரூ.2 லட்சத்தை அருள்ராஜிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் ஒரு வாரம் கழித்து அருள்ராஜ், அனைவருக்கும் அரசு வேலை கிடைத்து விட்டதாக கூறி போலி பணி ஆணை வழங்கி உள்ளார்.
தொடர்ந்து ஊதிய ஏற்பாடுக்கு நிரந்தர வங்கி சேமிப்பு கணக்கு துவங்க தலா ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் கூறினார். இதையடுத்து 12 பேரும் தலா ரூ.5 ஆயிரத்தை அனுப்பியுள்ளனர். பின்னர் 2 மாதத்தில் பணியில் சேருவதற்கான கடிதம் வந்துவிடும் என தெரிவித்துள்ளார். ஆனால் 2 மாதமாகியும் கடிதம் வராததால், அருளிடம் கேட்டபோது, காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த வெங்கடாசலபதி, அருள் கொடுத்த பணி ஆணைகள் குறித்து விசாரித்தபோது, அவை போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடாசலபதி இதுகுறித்து புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அருள் மீது வழக்கு பதிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் அருள் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி ஆணை வழங்கி 12 பேரிடம் ரூ.22 லட்சம் மோசடி appeared first on Dinakaran.