நம்மில் பல பேருக்கு இரண்டு காரணங்களால்தான் பெரும்பாலான பிரச்னைகள் வருகின்றன. அந்தப் பிரச்னையால் மன அழுத்தத்திற்கு ஆளாகித் தவிக்கின்ற தவிப்பு, பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தி தீர்க்க முடிந்த பிரச்னைகளைக் கூட, தீர்க்க முடியாதபடி, தடைகளை ஏற்படுத்தி விடுகிறது. இரண்டு வித்தியாசமான நண்பர்கள். அதில் முதல் நண்பர் எப்பொழுது பேசினாலும் அவருடைய பேச்சு அவர் கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் போன்றவற்றைக் குறித்ததாக இருக்கும். தங்கம் விலையைச் சொன்னால், அவர் தன்னுடைய அக்காவுக்கு கல்யாணம் செய்த போது தங்கம் விற்ற விலையையும், அதை வாங்கு வதற்காகதான் பட்ட கஷ்டத்தையும் கூறுவர். இவருக்கு நேர் மாறானவர் இன்னொரு நண்பர். அவர் எப்பொழுது பார்த்தாலும் இன்னும் 20 வருடங்கள் கழித்து என்னென்ன விலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இரண்டு பேருமே எப்பொழுதும் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அப்படிப் பேசினால் ஆரம்பிப்பது வேண்டுமானாலும் நிகழ்காலத்தில் இருக்குமே தவிர, ஒரு சில நிமிடங்களில் ஒருவர் பேச்சை இறந்த காலத்துக்கும் இன்னொருவர் பேச்சை எதிர்காலத்துக்கும் கொண்டு சென்று விடுவார்.
இதுதான் இன்றுள்ள பெரும்பாலோர் பிரச்னை. நாம் உண்மையில் வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கின்ற வார்த்தை கூடத் தவறு. வாழத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு அவர் வசத்தில் இருப்பது என்பது நிகழ்காலம் மட்டும்தான். நிகழ்காலம் நொடிக்கு நொடி கடந்த காலமாகிக் கொண்டிருக்கும். ஆனால், நாம் பெரும்பாலும் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டு எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தையும் மனதில் கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இந்த மனநிலையில் உள்ளவர்களை அடிக்கடி சந்திக்கலாம். அவர்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு யோசனையில் இருப்பார்கள். எந்த இடத்தில் உட்கார்ந்து, என்ன சாப்பிடுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்கிற பிரக்ஞைகூட இருக்காது. எப்பொழுதுமே அவர்கள் இறந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில் இருப்பார்கள்.
“என்ன சார், என்ன யோசனை?” என்று கேட்டால், ஒன்று கடந்த காலத்தைப் பற்றி ஏதாவது ஒரு நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ நினைவுபடுத்தி, “யோசித்துக் கொண்டிருந்தேன்’’ என்பார்கள். அல்லது அடுத்த வருஷம் என்ன செய்யலாம் என்று யோசனை செய்துகொண்டிருக்கிறேன் என்பார்கள். இன்று பெரும்பாலும் பலவிதமான யூகங்களின் அடிப்படையில் இப்படி நடக்குமோ, அப்படி நடக்குமோ, அப்படி நடந்தால் எப்படி அதிலிருந்து மீண்டு வருவது, இப்படி ஒரு பொருளாதார நெருக்கடி வந்துவிட்டால் என்ன செய்வது என்று எத்தனையோ சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும்.ஆனால் எதிரிலே வைக்கப்பட்டிருக்கின்ற சுவையான தேநீரோ காப்பியோ ஆறிக் கொண்டிருப்பதைக் கவனிக்க மாட்டார்கள். அதனால் எப்பொழுதும் அவர்கள் நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் இழந்து கொண்டிருப்பார்கள். கடைசி வரை இந்த நிகழ்காலத்தை அவர்கள் இழப்பதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் தேவையற்ற கற்பனைகளும் வீண் பயங்களும் நிரம்பியதாக இருக்கும். ஒரு கோயிலுக்குப் போனாலும்கூட அவர்களால் நிம்மதியாக சுவாமியை வழிபட முடியாது. அங்கே நடைபெறுகின்ற பாட்டுக் கச்சேரி, உபன்யாசம் மனம் லயித்துக் கேட்க முடியாது. இவர்களுக்குப் பிரச்னைகள் தீவிர மாகுமே தவிர குறையாது. சரி, இதற்கு என்ன தீர்வு? நிகழ்காலச் செயலை மிகச் சரியாக அனுபவித்துச் செய்தால் ஒருவன் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய எதிர்காலம் என்பது 90 சதவீதத்திற்கு மேல் நம்முடைய நிகழ்கால அமைதி, சந்தோஷம், செயல்கள், ஒழுங்கு, பேச்சு, இப்படிப் பல விஷயங்களைச் சார்ந்ததாகவே அமையும் என்பதை மறந்து விடக்கூடாது.
எனவே எப்பொழுதும் நிகழ்காலத்தில் கவனம் வையுங்கள். அது எதிர்கால வாழ்க்கையை நன்றாக இருக்கும்படியாக உங்களை அழைத்துச் செல்லும். எந்தப் பிரச்னைகளாக இருந்தாலும், நிகழ்காலத்தில் நீங்கள் செய்யும் எளிமையான, சரியான, சில நடவடிக்கைகள், அது எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்க்கும் வழியை உங்களுக்குக் காண்பிக்கும். அதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கதை உதவும்.ஒரு பெரிய பணக்காரர். மன அழுத்தம் தாங்காமல் தவித்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் குரு வந்திருந்தார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட குரு அவருக்கு, ‘‘எதிர்காலத்தை பற்றிக் கவலைப் படாமல் நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி’’ என்று அறிவுரை சொன்னார். பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.“ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக் கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்ன யோசனைகளால் தீர்த்துவிடமுடியுமா?’’ஜென் குரு கோபப்படவில்லை.
`‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’’ என்றார்.“ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’’“பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’’“பெரிய பிரச்னையில்லை. கார்லதான் வந்திருக்கேன்’ ’“உங்க கார்ல இருக்கிற விளக்கு ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’’“நிச்சயமா. அதில் என்ன சந்தேகம்?’’ “எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’’“என்ன சாமி, காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சா போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமீட்டர் என்ன? ஏழாயிரம் கிலோ மீட்டர் கூடப் போகலாமே’’…“அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனையும்’’ என்றார் ஜென்குரு. `‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்.ஒரு காரில் பயணம் செய்யும் பொழுது கார் கடந்துபோன பிறகு பின்பக்கம் இருட்டாக இருந்தாலும் வெளிச்சமாக இருந்தாலும் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நாம் முன்னே செல்லும் பொழுது, நாம் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் வெளிச்சம் இருந்தால் போதும், அதை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வெளிச்சம்தான் நிகழ்கால வெளிச்சம். நிகழ்காலத் தீர்மானங்கள். நிகழ்காலச் செயல்கள். அதில் கவனமாக இருங்கள்.
The post காரின் வெளிச்சம் சில அடி தூரம் appeared first on Dinakaran.