ஜீவகாருண்யமாய் காத்தருளும் ஜீவாஞ்சநேயர்

4 hours ago 3

மகான் ஸ்ரீவியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களை நாம் தொடர்ந்து தரிசித்து வருகிறோம். அந்தவகையில், பதிமூன்றாவது அனுமனாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள ஜீவாஞ்சநேயஸ்வாமியை பற்றி காணவிருக்கிறோம்.

பழமை மாறா கோயில்

ஆந்திர – கர்நாடக எல்லைப் பகுதியை ஒட்டி இருக்கும் பிரபலமான இடம்தான் பெல்லாரி. பெல்லாரியில் பல பழமைவாய்ந்த கோயில்கள் காணப்படுகின்றன. நம் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் கோயிலும், மிக பழமைவாய்ந்த கோயிலாகும். பெல்லாரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., பயணித்தால், இந்த ஜீவாஞ்சநேயஸ்வாமி திருக்கோயிலை அடைந்துவிடலாம். கட்டுரை எழுதுவதற்காக ஜீவாஞ்சநேயஸ்வாமி கோயிலை அடைந்ததும். அங்கு சற்று மழைத் தூறல் ஆரம்பமானது. மழைத் தூறலில், ஜீவாஞ்சநேய ஸ்வாமி கோயில் கண்ணில் தென்பட்டது. அதனை கண்டதும் மனம் சிலாகித்துக் கொண்டது. தூரத்தில் இருந்தே தெரிந்தது, இக்கோயில் மிகமிக  பழமையானது என்று!ஜீவாஞ்சநேயஸ்வாமி கோயிலுக்குள் நுழைந்ததும், சிமிட்டினால் ஆன துவஜஸ்தம்பம் (கொடிமரம்) கண்களில் தென்பட்டது. அதை வணங்கிவிட்டு உள்ளே சென்றதும், மிக பெரிய பாறை. அதன் நடுவில் அழகிய ஜீவாஞ்சநேயர். செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜீவாஞ்சநேயஸ்வாமியின் இருதயத்தில் வெள்ளியினால் ஆன ராமர் மற்றும் சீதாவின் உருவங்கள் பொருத்தப்பட்டிருந்தது. மேலும், பிரம்மாண்ட அலங்காரங்கள் ஏதும் இன்றி, ஒரே ஒரு துளசி மாலை மட்டுமே ஜீவாஞ்சநேயரின் மீது சாற்றப்பட்டிருந்தது. இதைக் கண்ட நாம் பரவசநிலைக்கு சென்றோம்.

இரு விளக்குகள்

காரணம், அலங்காரங்கள் இல்லாமல் இதுபோல் நிர்மால்யமாக காட்சிக் கொடுக்கும் போது, அனுமனின் முழு உருவத்தையும் நம்மால் காணமுடியும். அவை சற்று நம் கண்களுக்கு பரவச மூட்டும். நம்மை அறியாது நம் கண்களில் கண்ணீர் வழிந்தோடும். அதுதான் எங்களுக்கும் ஆனது!24 மணிநேரமும் ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு முன்பாக இரு குத்துவிளக்குகள் எரிந்துக் கொண்டே இருக்கிறது. மழை போன்ற பேரிடர் காலங்களில், மின்சாரம் தடைப் பட்டால் இந்த இரு குத்துவிளக்குகள் மட்டுமே ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு முன்பாக எரிந்துக் கொண்டிருக்கும். ஹாஹா… அப்போது காணவேண்டும் அனுமனை. மிக அழகாக இருப்பார், என்று ஒரு பக்தர் நம்மிடையே தெரிவித்தார்.

அமிர்தமான பஞ்சாமிர்தம்

அதே போல், இங்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மிகவும் பிரசித்தமானவை. எங்குமே இல்லாத அளவிற்கு சுவையாக இருக்கிறதாம். ஆப்பிள், மாதுளை, மாம் பழம், ஆரஞ்சு, பலாப்பழம் ஆகிய ஐந்து வகை பழங்களும், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர்திராட்சை ஆகியவையோடு நெய், தேன், கற்கண்டு, பேரிச்சம்பழம், வெல்லம் ஆகியவை சேர்த்து ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, போன்ற விசேஷ நாட்களில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது. வெறும் பழங்களினாலோ அல்லது பிஸ்தா முந்திரிகளினாலோ பஞ்சாமிர்தம் சுவையாக இல்லை. மாறாக, ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யும் போது, “`ஹரி வாயு ஸ்துதி’’, “பலிதா (Balitha) ஸூக்தம்’’ முதலியன மந்திரங்களை சொல்லி பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதால், பஞ்சாமிர்தமானது அமிர்தம் போல் தித்திக்கிறது. அதுதான் காரணம்!.

 

The post ஜீவகாருண்யமாய் காத்தருளும் ஜீவாஞ்சநேயர் appeared first on Dinakaran.

Read Entire Article