இட்டாநகர்,
அருணாசல பிரதேசத்தில் ஷி-யோமி மாவட்டத்தில் அரசு உறைவிட முதன்மை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த வார்டன் 8 ஆண்டுகளாக 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி யுபியா பகுதியில் உள்ள சிறப்பு போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இதில், யம்கென் பாக்ரா, மர்போம் காம்தீர் மற்றும் சிங்டங் யோர்பென் ஆகிய 3 பேருக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.
போக்சோ சட்டத்தின் கீழ், பாக்ராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர், 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் பள்ளியில் வார்டனாக செயல்பட்டு வந்திருக்கிறார். 328 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் மற்றும் போக்சோ சட்டத்தின் 6, 10 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில், இந்தி ஆசிரியரான காம்தீர் மற்றும் முன்னாள் தலைமையாசிரியரான யோர்பென் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி இட்டாநகர் போலீஸ் சூப்பிரெண்டு ரோகித் ராஜ்பிர் சிங் கூறும்போது, இந்த தீர்ப்பானது உடனடி தீர்வை தருவது மட்டுமின்றி, குழந்தைகளின் பாதுகாப்பை சுற்றி உள்ள விரிவான சமூக விழிப்புணர்வுக்கான ஒரு முக்கிய திருப்பு முனையாகவும் அமைந்துள்ளது. அவர்களுடைய உரிமைகள் மற்றும் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான கூட்டு பொறுப்புணர்வை மீண்டும் வலியுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என கூறியுள்ளார்.