அரசு நிர்வாகத்தில் மோடியின் 23 ஆண்டுகள்!

3 months ago 23

சென்னை,

கடந்த திங்கட்கிழமை பிரதமர் நரேந்திரமோடியின் அரசு நிர்வாக பணியின் 23-வது ஆண்டாகும். குஜராத் முதல்-மந்திரியாக 3 முறை 13 ஆண்டுகள் அரசை நடத்திய நரேந்திரமோடி, நாட்டின் பிரதமராக இருமுறை ஆட்சியை நடத்தி, இப்போது 10 ஆண்டுகளை கடந்து 3-வது முறையாக ஆட்சியில் இருக்கும் அரிய சாதனையை படைத்துள்ளார். சாதாரண டீக்கடை தொழிலாளி அதே மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும் முடியும், ஏன் நாட்டின் பிரதமராகவும் முடியும் என்றால் அதற்கு அடிப்படை அவரது கொள்கைப் பிடிப்பும், சலியாத உழைப்பும், பொது வாழ்க்கையில் அவருக்குள்ள அர்ப்பணிப்புமே காரணம்.

முதல்-மந்திரி பொறுப்பிலும், பிரதமர் பொறுப்பிலும் அவர் எடுத்த துணிச்சலான முயற்சிகளும், தொழில்நுட்ப பாய்ச்சலும், பொருளாதார திட்டங்களும் அவருக்கே உரிய தனித்திறமையை பறைசாற்றியது. பல திட்டங்களை பொதுமக்களை மையப்படுத்தியே அவர் எடுத்த காரணத்தால்தான், அந்த திட்டங்களெல்லாம் பெரிய வெற்றியைப் பெற்று மக்கள் இயக்கங்களானது. குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் நிறைவேற்றிய பல திட்டங்களின் வெற்றிதான் அந்த திட்டங்களுக்கு 'குஜராத் மாடல்' என்ற பெயரைக்கொடுத்ததுடன், அவர் பிரதமரான பிறகு நாடு முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களாக உருவெடுத்தது.

2001-ம் ஆண்டுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறையும், மின்சார தேவையும் இருந்தது. பொருளாதார நிலையிலும் தத்தளித்தது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க அவர் குஜராத்தில் சுஜலம் சுபாலம் யோஜனா என்ற திட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றியதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை நீங்கியது. இந்த திட்டத்தின் வெற்றிதான் அவர் பிரதமரானவுடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யும் வகையிலான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அமல்படுத்த வைத்தது.

இதுபோல, குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களுக்கும் 24 மணி நேர மின்சார வினியோகம் செய்யும் வகையிலான ஜோதிகிராம் திட்டத்தின் வெற்றிதான் பிரதமரானவுடன் தேசிய சவுபாக்கியா என்ற திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளையும் மின்மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்தது. குஜராத்தில் அவர் நிறைவேற்றிய நிர்மல் குஜராத் என்ற திட்டம்தான் சுவச் பாரத் அபியான் என்ற தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்குவதற்கு தூண்டுகோலாக அமைந்தது. இந்திய கிராமங்களில் உள்ள 11 கோடியே 68 லட்சம் வீடுகளில் கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு குஜராத் மாடலே காரணம். டிஜிட்டல் இந்தியா இயக்கம் மூலமாக அவர் அனைத்து ஊர்களுக்கும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி அரசு நிர்வாகத்தையும் செம்மைப்படுத்தியுள்ளது.

நாட்டின் உற்பத்தியை மேம்படுத்தவும், இறக்குமதியை குறைக்கவும் அவர் கொண்டுவந்த இந்தியாவில் தயாரிப்போம், சுய சார்பு திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்கள், மருத்துவ காப்பீடு திட்டம், பி.எம்.கிசான் என்ற விவசாயிகளுக்கான நிதி திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்ற அனைவருக்கும் வீடு திட்டம் என்பது போன்ற பிரதமர் நரேந்திரமோடியின் பல சிறப்பு திட்டங்கள் அவரது இப்போதைய முழக்கமான வளமான இந்தியா என்ற லட்சியத்தை அடைய துணை நிற்கின்றன. "உலக பொருளாதாரத்தில் இப்போது 5-வது இடத்தில் இருக்கும் இந்தியாவை தனது 3-வது முறை ஆட்சியின் போதே 3-வது இடத்துக்கு கொண்டுவருவேன்" என்ற லட்சியத்தை நிறைவேற்றும் வகையிலேயே அவர் பல புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

Read Entire Article