சென்னை: ஓசாக் இந்தியா வருடாந்திர கூட்டத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். ஓசாக் (OSAC) என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் உறவுநய பாதுகாப்பு சேவைப் பிரிவு (DSS) மற்றும் வெளிநாட்டில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு நிபுணர்களுக்கு இடையிலான அரசு-தனியார் கூட்டாண்மை ஆகும். ஓசாக் உறுப்பினர்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வதோடு வெளிநாடுகளில் அமெரிக்க உறவுகளை பாதுகாப்பதற்கான வலுவான பிணைப்புகளை பராமரிக்கின்றனர்.
அந்தவகையில், சென்னையில் ஓசாக் இந்தியா வருடாந்திர கூட்டத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இதில், அமெரிக்க துணை தூதரகத்தைச் சேர்ந்த உறவுநய பாதுகாப்பு சேவைப் பிரிவு மண்டல அலுவலர் ஸ்காட் ஷானர், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த உறவுநய பாதுகாப்பு சேவைப் பிரிவு மூத்த பிராந்திய அலுவலர் கிறிஸ்டோபர் கில்லிஸ், ஓசாக் இந்தியா சென்னை கிளையின் தனியார் துறை இணை தலைவர் ஜான் பால் மாணிக்கம் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் அணுகல் (DEIA) ஆகியவை தமிழ்நாட்டில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இவற்றையே ஓசாக்கும் பின்பற்றுவது மகிழ்ச்சி. இன்றைய நிகழ்வு அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வலுவான வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவை பிரதிபலிக்கிறது. அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், நாம் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க தினமும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
தனியார்-அரசு கூட்டாண்மைக்கான சிறந்த உதாரணமாக ஓசாக் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அமெரிக்க துணைத் தூதரகத்தைச் சேர்ந்த உறவுநய பாதுகாப்பு சேவைப் பிரிவு மண்டல அலுவலர் ஸ்காட் ஷானர் பேசுகையில் “பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களாக, சமநிலை முறைமைகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய தனியார் துறையுடன் இணைந்து நம்பிக்கையை உருவாக்க, மற்றும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, கண்காணித்து, பாதுகாப்பு சிக்கல்களை முன்கூட்டியே கணிக்க நாங்கள் முயற்சிக்கிறோம்’ என்றார்.
The post அரசு-தனியார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஓசாக் இந்தியா வருடாந்திர கூட்டம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.