கோவை: கோவை மாவட்டம் சின்னத்தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டையன் என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை, அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானை தாக்கி கடந்த ஜனவரி 23 ம் தேதியன்று நடைபயிற்சிக்கு சென்ற தாளியூர் பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் நடராஜ் (69) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த யானை கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வேட்டையன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து முத்து மற்றும் சுயம்பு என்ற 2 கும்கி யானைகளை அழைத்து வந்தனர். காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் கும்கி யானைகளை வனப்பணியாளர்கள் தனித்தனியாக வன எல்லையோரங்களில் ரோந்து அழைத்து சென்றனர். கடந்த வாரத்தில் கும்கி யானை சுயம்புவிற்கு மதம் பிடித்து இருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்த யானை டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் முத்து யானைக்கும் மதம் பிடிப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனகால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி முத்து யானையும் டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு லாரி மூலம் அழைத்து செல்லப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுயம்பு யானைக்கு மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. முத்து யானைக்கும் மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அதனால் கும்கி யானை முத்துவும் டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. தற்போது ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் குறைந்துள்ளது. இருப்பினும் காட்டு யானையை விரட்ட சின்னத்தம்பி என்ற கும்கி யானையை டாப்சிலிப் முகாமில் இருந்து அழைத்து வர முடிவு செய்துள்ளோம். இதற்காக லாரியை அனுப்பி உள்ளோம். நாளை(பிப்.10 இன்று) அந்த யானை தாளியூர் பகுதிக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சின்னத்தம்பியின் கதை;
கடந்த 2019ம் ஆண்டு தடாகம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். டாப்சிலிப் பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னத்தம்பி வனப்பகுதியைவிட்டு வெளியேறி மடத்துக்குளம் வரை சென்றது. பின்னர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அந்த யானை, கும்கியாக மாற்றப்பட்டது. தற்போது கும்கி யானையாக காட்டு யானையை விரட்ட வருவது குறிப்பிடத்தக்கது.
The post காட்டு யானையை விரட்ட வந்த 2 கும்கிகளுக்கும் மதம் பிடித்தது: களம் இறங்கிய ‘சின்னதம்பி’ appeared first on Dinakaran.