அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதிய பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம்: பொது கணக்காளர் தகவல்

1 month ago 5

சென்னை: ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதிய பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கணக்கு மற்றும் தணிக்கை துறையின் பொது கணக்காளர் வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நிதித்துறை செயலாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் கலந்துகொண்டார். மேலும், தெற்கு ரயில்வேயின் தலைமை தணிக்கை அதிகாரி அனிம் செரியன், தமிழ்நாடு தணிக்கை துறையின் முதன்மை கணக்காளர் ஜெனரல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் அருண் சுந்தர் பேசுகையில், ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணக்குத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக அரசு சார்பில் ஐ.எப்.எஸ்.ஆர் செயலி கொண்டு வந்த பிறகு அனைத்து பணிகளும் இணையதளத்தின் வேகமாக நடக்கின்றன. மேலும், சில பிரச்னைகள் இருந்தாலும் அதனை உடனடியாக தீர்ப்பதாகவும், அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த பிரச்னையும் வராது’’ என்றார்.

இதை தொடர்ந்து நிருபர்களிடம் கணக்கு மற்றும் தணிக்கை துறையின் பொது கணக்காளர் வெள்ளியங்கிரி கூறியதாவது: கணக்கு மற்றும் தணிக்கை துறையின் வார விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளை அழைத்து கணக்கு துறையில் உள்ள ஓய்வூதிய பண பலன்கள் குறித்து அதனை மாநில அரசிடமிருந்து எவ்வாறு சேகரித்து நாம் செயல்படுத்துவது குறித்த வழிமுறைகள் விளக்கப்பட்டன. மேலும், மாநில அரசு அதிகாரிகளின் கணக்குகள் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதேபோல், தமிழ்நாடு அரசு துறையில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெறுகின்றனர். இவர்கள் ஓய்வுபெறும் 3 மாதங்களுக்கு முன்பாகவே தங்களின் விவரங்களை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் ஓய்வுபெற்ற அடுத்த மாதமே ஓய்வூதியம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதிய பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம்: பொது கணக்காளர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article