சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28ம் தேதி பேரவையில் விதி 110ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பண்டிகை கால முன்பண உயர்வு பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். அந்த அறிவிப்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில், இதுவரை வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரம், இனி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் அதற்கான அரசாணையை நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் நேற்று பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளின் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பண்டிகை கால முன்பணம் பெறும் தகுதியுடைய அனைவருக்கும், இந்த அரசாணை பொருந்தும். அதன்படி அவர்கள் ரூ.20 ஆயிரத்தை பண்டிகை கால முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். அந்த பணத்தை பிடித்தம் செய்யும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.20,000 பண்டிகை கால முன்பணம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.