அரசியல் பேராசைக்காக மாமனார் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார் ஆதவ் அர்ஜுனா ஒரு முட்டாள்: மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம்

1 day ago 4

கோவை: பிரபல லாட்டரி அதிபர் மார்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். பல்வேறு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட காரணத்தால் அந்த கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியில் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ‘பல பொய் பிரசாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர்தான் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார்’ என பேசி இருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு மார்ட்டின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சிற்கு அவரது மைத்துனரான மார்ட்டின் ஜோஸ் சார்லஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் மோசமான கருத்துக்களுக்கு எனது ஆட்சேபனையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு தனது அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய தனது மாமனார் பணத்தை, அதாவது எனது தந்தை பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகிறார் என்ற அண்ணாமலையின் கூற்றையும் நான் ஆதரிக்கிறேன். ஆதவ் அர்ஜுனாவின் முட்டாள்தனமான நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மனைவியை தொடர்ந்து மைத்துனரும் எதிர்ப்பு
மார்ட்டினின் மகனும், ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனருமான சார்லஸ் புதுச்சேரி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அங்கு பாஜ மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் சார்லஸ் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு சார்லஸ் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் மற்றும் தொழில் முடிவுகளும், கருத்துகளும் சுயமாக எடுக்கப்பட்டது. இதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பில்லை. தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசியல் பேராசைக்காக மாமனார் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார் ஆதவ் அர்ஜுனா ஒரு முட்டாள்: மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article