மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே கள்ள கூட்டணி அரசியலுக்கு எடுத்துக்காட்டாக திகழும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்போது சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), பாஜ- தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் அவியல் ஆட்சி நடக்கிறது. அங்கு எதிர்க்கட்சி எதுவென்று கேட்டால், அதுவும் சிவசேனா, தேசியவாத காங்கிரசின் இன்னொரு அணியாகவே இருக்கும். ஆட்சிகளையும், கட்சிகளையும் உடைத்து தான்தோன்றித்தனமாக செயல்படும் பாஜவின் பச்சோந்தி முகத்தை வெளிப்படுத்துவதில் மகாராஷ்டிரா அரசியலுக்கு பெரும் பங்குண்டு.
அரசியல் ஒருபுறம் இருக்க, இப்போது அங்கு ஆளும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாஜி அமைச்சர் பாபா சித்திக் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இக்கொலை அரசியல் கொலையா அல்லது ஆதாய கொலையா மற்றும் முன்விரோதம் காரணமா என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. மும்பையின் அரசியலும், தாதாக்களின் வளர்ச்சியும் இரண்டற கலந்தது. அங்கு ஒவ்வொரு தாதாக்களின் வளர்ச்சிக்கு பின்னாலும், அரசியல் பின்னணி அதிகமிருக்கும். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் என தொடங்கும் மும்பை டான்களின் வளர்ச்சி, தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன், கரிம் லாலா என மும்பை தாதாக்களின் நிழல் உலகம், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அரசியல் பின்னணியோடு விரிவடைந்துள்ளது. மும்பையில் துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு சர்வசாதாரணமாக நடந்தேறிய காலங்களும் உண்டு.
தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட மாஜி அமைச்சர் பாபா சித்திக் 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இப்போது அவரது மகன் ஜீஷான் எம்எல்ஏவாக உள்ளார். தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு வெளியே வந்தபோதுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட விதம் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு போலீசார், இது கூலிப்படையினரால் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். இக்கொலையின் பின்னணியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கும் கேள்விக்குறியாகி வருகிறது.
ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் ஒரு எம்எல்ஏவின் தந்தைக்கே உரிய பாதுகாப்பில்லாத சூழல் அங்கு காணப்படுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு யு பிரிவு போலீஸ் பாதுகாப்பும் இருந்தது. அதையும் மீறி அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீரழிவையே காட்டுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் ஒரு உத்தரபிரதேசமாக மாறி வருவதாக அங்கு எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பாபா சித்திக், நடிகர் சல்மான்கானின் நண்பர் என்பதால், அவரை நெருங்க முடியாத எதிரிகள், பாபா சித்திக்கை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்கிற சந்தேகமும் உலா வருகிறது.
சல்மான்கானின் எதிர்தரப்பான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், இக்கொலையில் அரசியல் பின்னணி இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. கருத்து மோதல் களமாக இருக்கும் அரசியல் அரங்கு கொலைக்களமாக மாறுவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இந்த போக்கை கூண்டோடு ஒழிப்பதை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
The post அரசியல் கொலைகள் appeared first on Dinakaran.