
புதுடெல்லி,
சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் நடிகர் அஜித்குமாரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பத்மபூஷன் விருதை அஜித் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் அஜித்குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நடிகர் அஜித்குமார் பேட்டியளித்தார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;-
"எனக்கு அரசியல் தொடர்பான லட்சியம் எதுவும் கிடையாது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
ஜனநாயகத்தில் உள்ள சிறப்பான விஷயம் என்னவென்றால், மக்கள் தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள். திரைத்துறையினர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும், அரசியலுக்கு வந்து தங்களால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தால் அவர்களை நான் மனதார வாழ்த்துகிறேன்.
மக்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு, அதில் நிறைய விமர்சனங்களை கூறலாம். ஆனால் திரைத்துறையை சேர்ந்த எவரும் மோசமான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. வெற்றிக்கான பார்முலா தெரிந்துவிட்டால் அனைத்து படங்களும் வெற்றி படங்களாகிவிடும்.
அதே போன்றுதான் அரசியலும். வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது மிகவும் எளிது. ஆனால் களத்தில் இருப்பவர்களுக்கு தான் அதில் இருக்கும் கஷ்டம் தெரியும்.
நாம் 140 கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு நாட்டில் இருக்கிறோம். பல மொழிகள், பல மதங்கள், பல ஜாதிகள் இருக்கின்றன. எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்துவது கடினம்.
நான் ஜனாதிபதி மாளிகையில் இருந்தபோது அங்கு எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை பார்த்தேன். அரசியல்வாதிகள் தினந்தோறும் இவற்றை கடந்து வருகிறார்கள். உண்மையில் அது மிகவும் கடினமான பணி.
அரசியல் தொடர்பாக நான் எனது தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுவது கிடையாது. ஒரு மாநிலத்தை, அல்லது ஒரு நாட்டை தங்கள் தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு. பலர் சரியான நோக்கங்களுக்காகவும், சிலர் தவறான நோக்கங்களுக்காகவும் அரசியலில் இருக்கின்றனர். ஒருவர் அரசியலுக்கு வருவது என்பது 100 சதவீதம் துணிச்சலான முடிவு."
இவ்வாறு அஜித்குமார் தெரிவித்தார்.