
சென்னை,
சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த இருவர் மீது வேலூரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனோகர் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது இரண்டு மாதங்களில் இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உறுதியளித்தபடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றும் படி உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும், உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படுவதாக கூறினாலும் கூட கள நிலவரங்கள் வேறாக இருப்பதால் ஒவ்வொறு முறையும் நீதிமன்றத்தின் கதவை தட்டவேண்டியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை வேதனை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.