
மும்பை,
மராட்டிய மாநிலம் கொல்ஹாபூர் பகுதியில் நடைபெற்ற 'சம்விதான் சம்மான் சம்மேளன்' நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் தற்போது உள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்குவது அவசியம் என்று தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டில் உள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்குவதற்கான சட்டங்களை இயற்றுவதை காங்கிரஸ் கட்சியும், 'இந்தியா' கூட்டணியும் உறுதி செய்யும் என்று அவர் கூறினார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று கூறினார்.
மேலும் தலித்துகள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வரலாறு பள்ளிகளில் கற்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அந்த வரலாற்றை அழிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.