புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது அம்பேத்கரை அவமதித்து விட்டதாக கூறி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டன. அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே டாக்டர் அம்பேத்கரை அவமதித்த மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சமூகங்களை புறக்கணித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகளால் காங்கிரசார் திகைத்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அம்பேத்கர் மற்றும் அவரது சித்தாந்தத்துக்கு பாஜகவினர் எதிரானவர்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பாஜகவினர் ஏற்கெனவே தெரிவித்து வந்தனர். அரசியலமைப்பையும் அம்பேத்கர் செய்த பணிகளையும் முடிப்பதே அவர்களின் ஒரே வேலை இது நாடு முழுவதும் அறிந்ததே என்றார்.