நியூயார்க்,
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவும் காணப்படுகிறது.
அந்நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், முன்னெப்போதும் காணப்படாத பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் மில்வாகீ பகுதிகளில் 4 பேர் மரணம் அடைந்து உள்ளனர். கடுமையான பனிப்பொழிவால் சாலை மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
லூசியானா மாகாண பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. அந்த மாகாண கவர்னர் ஜெப் லாண்ட்ரி, அடுத்த 7 நாட்களுக்கு கடுமையான குளிர் இருக்கும். அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
இதேபோன்று, ஜார்ஜியா மாகாணத்தின் சவானா நகர மேயரும், பருவகால புயல்கள், பனி மற்றும் அடர்பனியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்து உள்ளார்.