அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்..? வாக்குப்பதிவு தொடங்கியது

2 months ago 11

வாஷிங்டன்,

உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன.

அமெரிக்க நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும். அதன்படி நவம்பர் 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலுடன், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் (435 உறுப்பினர்கள்) மற்றும் செனட் சபையின் 34 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 13 மாநில மற்றும் பிராந்திய ஆளுநர் பதவிகள் மற்றும் பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கின.

ஜனாதிபதி பதவிக்கு ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும் சில வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். நேரடி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தங்கள் செயல் திட்டங்களை வெளியிட்டு காரசாரமக விவாதித்தனர்.

அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், இ- மெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார்.

தேர்தல் நாளான இன்று (5.11.2024) காலையில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் இன்று தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அமெரிக்காவில் மாநிலங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் மாறுபடும். இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடையும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும். இழுபறி எதுவும் இல்லை என்றால், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது உடனடியாக தெரியவரும். அதசமயம், அடுத் ஜனாதிபதி யார்? என்பது அநேகமாக நாளையே தெரிந்துவிடும். இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

Read Entire Article