அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்

2 weeks ago 3


வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். 2வது முறையாக அதிபரான அவர், முதல் நாளிலேயே பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (78), ஜனநாயக கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிசை வென்றார். இதன் மூலம், 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் 2வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய அதிபர் பதவியேற்பு விழா அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று நடந்தது. டிரம்ப் மீண்டும் அதிபராக உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டனர். கட்சியினரும் ஆதரவாளர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியை நேரில் காண கேபிடல் ஏரினா அரங்கில் பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு காலையில் கடும் குளிரிலும் ஏராளமானோர் குவிந்தனர்.

பாரம்பரிய வழக்கப்படி, பதவியேற்புக்கு முன்பாக டிரம்ப், செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் பிரார்த்தனையுடன் தனது முக்கிய தினத்தை தொடங்கினார். இதில், டிரம்புடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். பிரார்த்தனையைத் தொடர்ந்து, அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் தனது மனைவியுடன் சென்றார். அவர்களுடன் துணை அதிபராக பதவியேற்கும் ஜே.டி.வன்ஸ் அவரது மனைவி இந்திய வம்சாவளியான உஷா வன்ஸ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு அவர்களை, அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடனும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாபும் கட்டித்தழுவி வரவேற்று தேநீர் விருந்து அளித்தனர். அதிபர் பைடனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால், வெள்ளை மாளிகையில் அவரது கடைசி நிகழ்வாக இந்த தேநீர் உரையாடல் அமைந்தது. சிறிது நேரம் உரையாடிய பின், நாடாளுமன்றத்திற்கு டிரம்பை, பைடன் அழைத்துச் சென்றார். கேபிடால் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா விமரிசையாக நடந்தது.

பொதுவாக, நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளி வளாகத்தில் அதிபர் பதவியேற்பு விழா நடத்தப்படும். ஆனால், கடும் குளிர் நிலவுவதால் இம்முறை நாடாளுமன்ற உள்ளரங்கில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் முக்கிய தலைவர்கள் மட்டுமே விழா அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில், முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோரும், உலகின் முன்னணி தொழிலதிபர்களான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஆப்பிள் தலைவர் டிம் குக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி மற்றும் பல்வேறு உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விழாவில் பங்கேற்றனர்.

முதலில் ஜே.டி.வன்ஸ் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உடனடியாக மரைன் பேண்ட் குழுவினர் தேசிய கீதத்தை இசைக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க புதிய அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து புதிய அதிபராக டிரம்ப் நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையாற்றினார். அதன் பின், பதவி விலகும் அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை நாடாளுமன்றத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கும் வழியனுப்பு விழாவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. புதிய அதிபராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே டிரம்ப், தனது அலுவலகத்திற்கு சென்று 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

அதில் அகதிகள் கொள்ளையில் மாற்றம், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கை குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. உச்ச அதிகாரம் படைத்த நாடான அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது அடுத்த 4 ஆண்டுகால ஆட்சி பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பங்கேற்பது எனது பாக்கியம்
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வாஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்காவின் 47வது அதிபரின் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சராகவும் பிரதமரின் சிறப்பு தூதராகவும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த பாக்கியம். செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் பதவியேற்பு நாள் சிறப்பு பிரார்த்தனையில் நானும் கலந்து கொண்டேன்’’ என்றார்.

பழிவாங்கலில் இருந்து பாதுகாத்த பைடன்
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியில் அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மூலம் வன்முறையை தூண்டினார். இதனால், 2021 ஜனவரி 6ம் தேதி பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் பயங்கர தாக்குதலை நடத்தினார். இதுதொடர்பாக டிரம்புக்கு எதிராக விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானி அந்தோணி பவுசி, ஓய்வுபெற்ற ஜெனரல் மார்க் மில்லி மற்றும் பிற உறுப்பினர்களுக்கு அதிபர் பைடன் தனது இறுதி மணி நேரத்தில் அசாதாரண அதிகாரங்களை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கினார்.

டிரம்ப் அதிபரானதும் இவர்கள் மீது எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக பைடன் இத்தகைய மன்னிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. நாட்டிற்காக அயராத அர்ப்பணிக்காக நாடு செலுத்தும் நன்றிக் கடன் இது என பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து கூறிய புடின்
டிரம்ப் பதவியேற்புக்கு முன்பாகவே அவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்தார். ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலுடனான வீடியோ அழைப்பில் பேசிய புடின், ‘‘அமெரிக்காவின் புதிய அதிபராகும் டிரம்புக்கு வாழ்த்துக்கள். ரஷ்யாவுடன் நேரடி தொடர்புகளை மீட்டெடுக்கவும், மூன்றாம் உலகப் போரை தடுக்கவும் டிரம்பின் விருப்பங்களை நாங்கள் வரவேற்கிறோம். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நலன்களை பாதுகாப்பேன். எந்தவொரு நீடித்த அமைதிக்கும், நெருக்கடிக்கான பிரச்னைகளை தீர்ப்பதும், பிராந்தியத்தில் வாழும் அனைத்து மக்களின் சட்ட நலன்களையும் மதிப்பதும் அவசியம்’’ என குறிப்பிட்டார்.

The post அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article