அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் உலவும் பேய்...? இணையத்தில் பரவும் அதிர்ச்சி செய்திகள்

2 months ago 14

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்றது பற்றிய செய்தி வெளியான நிலையில், வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய சில விசயங்களையும் தெரிந்து கொள்வது தேவையாக உள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த நபர் என அறியப்படும் அமெரிக்க ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லம் என வெள்ளை மாளிகை அறியப்படுகிறது. 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில், பேய்கள் காணப்படுகின்றன என்றும், இரவு நேரத்தில் மர்ம சப்தம் எழுகிறது என்றும் பல தசாப்தங்களாக அதுபற்றிய கதைகள் கூறப்பட்டு வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளிவந்துள்ள சூழலில், இந்த கதைகள் இணையதளத்தில் மீண்டும் பரவி வருகின்றன. இதுபற்றி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், 3-வது ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் உள்பட இதற்கு முன்னால், வெள்ளை மாளிகையில் வசித்த பலரும் பேயை எதிர்கொண்ட பல விசயங்கள் கூறப்படுகின்றன.

எனினும், 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகையில் உலவுகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இதுபற்றி 1946-ம் ஆண்டு ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமேன், அவருடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் அவருடைய ஜனாதிபதி நூலகம் மற்றும் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதில், குளியல் முடித்ததும் அணிந்து கொள்ளும் ஆடையை அணிந்து கொண்டு, கதவை திறந்து பார்த்தேன். ஒருவரும் இல்லை. வெளியே சென்று, அறையின் கீழே என பல இடங்களிலும் பார்த்தேன். உன்னுடைய அறைக்குள்ளும், மார்கியின் அறைக்கும் சென்றேன். ஒருவரையும் காணவில்லை. பின்பு, கதவை பூட்டி விட்டு படுக்க சென்றேன். அப்போது, திறந்திருந்த உன்னுடைய அறையில் கால் தடங்கள் காணப்பட்டன. துள்ளி குதித்து, வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை.

ஆனால், உளவு அதிகாரிகளோ குறிப்பிட்ட அந்த நேரத்தில், ஒரு காவலாளி கூட இல்லை என கூறினர். இந்த இடத்தில் பேய் உலவுகிறது என தெரிகிறது. இந்த பேய்கள் என்னை தூக்கி செல்வதற்கு முன் நீயும், மார்கியும் திரும்ப வந்து என்னை பாதுகாத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை வெளியிட்ட செய்தியில், சந்தேகமேயின்றி, வெள்ளை மாளிகையில் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் ஆவியே சுற்றி வருகிறது என தெரிவிக்கின்றது. 1865-ம் ஆண்டு அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், லிங்கனின் ஆவி, எல்லோ ஓவல் அறை மற்றும் லிங்கனின் படுக்கையறையில் தோன்றியுள்ளது என கூறப்படுகிறது.

ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜின் மனைவி கிரேஸ் கூலிட்ஜ், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் நெதர்லாந்து ராணி வில்ஹெல்மினா ஆகிய பிரபலங்களுக்கு அவர் தெரிந்துள்ளார். இதனால் லிங்கன், வெள்ளை மாளிகையில் அடிக்கடி காணப்படும் ஆவியாக இருக்கிறார்.

இதேபோன்று, வெள்ளை மாளிகையில் வசிப்பவர்கள் மற்றும் பணியாளர்கள் பல தருணங்களில், அமெரிக்காவின் 2-வது முதல் பெண்மணியான அபிகெயில் ஆடம்சின் ஆவியை பார்த்தோம் என கூறியுள்ளனர்.

அவர் துணிகளை காய போட வருவார் என்றும் லேவண்டர் வாசம் வரும் என்றும் கிழக்கு அறையில் ஈர ஆடையை பார்த்தோம் என்றும் ஊழியர்கள் பல முறை கூறியுள்ளனர்.

ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் மகள்களான ஜென்னா புஷ் ஹேகர் மற்றும் அவருடைய சகோதரி பார்பரா என இருவரும் லிங்கன் அறையில் உள்ள குளிர்காயும் இடத்தில் இருந்து பியானோ வாசிக்கும் இசையை 2 முறை கேட்டிருக்கிறோம் என அச்சத்துடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டனர்.

ஒருமுறை எங்களுடைய தொலைபேசி மணி நள்ளிரவில் ஒலித்தது. நான் எழுந்து விட்டேன். அப்போது அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில், 1920-ம் ஆண்டில இசைக்கப்பட்ட பியானோ இசை கேட்டது என 2018-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜென்னா அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார்.

இதேபோன்று, ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட், ஜனாதிபதியின் மகள் மவுரீன் ரீகன், அவருடைய கணவர் டென்னிஸ் ரிவெல் மற்றும் பிராங்ளின் ரூஸ்வெல்டின் பணியாளர்கள் பலரும் லிங்கனின் ஆவியை பார்த்திருக்கிறோம் என கூறியுள்ளனர்.

Read Entire Article