
வாஷிங்டன்,
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகமாக வரிவிதிப்பதாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்றும் டிரம்ப் கூறினார்.
இதன்படி, பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில், இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் அவர் பேசியதாவது;-
"நமது நாட்டின் 4,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. நமது நிலத்தை நாம் திரும்பப் பெற வேண்டும். ஜனாதிபதியும், பிரதமரும் சீன அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது.
இது நாம் நாட்டு மக்கள் மூலம் நமக்கு தெரியவரவில்லை. மாறாக, இந்தியாவின் ஜனாதிபதியும், பிரதமரும் தங்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக இந்திய மக்களிடம் சொன்னது சீனாவின் தூதர்தான்.
வெளியுறவுக் கொள்கை என்பது வெளி நாடுகளின் உறவுகளை நிர்வகிப்பது. ஒருபுறம், நீங்கள் சீனாவிற்கு நமது நிலத்தில் 4,000 சதுர கிலோமீட்டரை கொடுத்துள்ளீர்கள். மறுபுறம், நமது நட்பு நாடான அமெரிக்கா திடீரென்று நம் மீது வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்திய பொருளாதாரத்தை, குறிப்பாக ஆட்டோமொபைல் துறை, மருந்து உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளை முற்றிலும் சீரழிக்கும்.
வெளியுறவுக் கொள்கை குறித்து முன்னாள் பிரதமர் இந்தியா காந்தி கூறுகையில், 'நான் இந்தியன், வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் நான் இடது பக்கமோ, வலது பக்கமோ சாயமாட்டேன், நடுநிலையாக நிற்பேன்' என்று கூறினார்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.விடம் வேறுபட்ட தத்துவம் உள்ளது. அவர்களிடம் இடது பக்கம் சாய்வதா அல்லது வலது பக்கம் சாய்வதா என்று கேட்டால், அவர்கள் 'வெளிநாட்டவர் முன்பு நாம் தலை வணங்குவோம்' என்று கூறுவார்கள். இது அவர்களின் கலாசாரத்தில், அவர்களின் வரலாற்றில் உள்ள ஒன்று.
நமது நிலத்தைப் பற்றியும், நமது நட்பு நாடு நம் மீது விதித்துள்ள இந்த வரிகள் பற்றியும் இந்திய அரசாங்கம் பதில்களை வழங்க வேண்டும்."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.