கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை

3 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா அருகே போலியார் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி சிந்துதேவி. இவர்களது மகள் அகன்ஷா (வயது 22). இவர் பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள எல்.பி.யூ. பல்கலைக்கழகத்தில் ஏரேநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தார். கடந்த 6 மாதங்களாக டெல்லியில் விண்வெளி என்ஜினீயராக அவர், வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மேற்படிப்புக்காக அகன்ஷா, ஜெர்மனி செல்ல தயாராகி வந்தார். இதற்காக அவருக்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டது. இதனால் பஞ்சாப்பில் உள்ள கல்லூரிக்கு சென்று ஆவணங்களை வாங்க அகன்ஷா முடிவு செய்தார். இதற்காக அகன்ஷா, கடந்த 16-ந்தேதி டெல்லியில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரசுக்கு சென்று நண்பரின் அறையில் தங்கினார்.

பின்னர் மறுநாள் அதாவது நேற்று முன்தினம் கேரளாவை சேர்ந்த நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பக்வாராவில் உள்ள கல்லூரிக்கு சென்றார். அப்போது, தனது பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய அகன்ஷா, தான் கல்லூரிக்கு சில ஆவணங்களை வாங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு அகன்ஷாவை அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பஞ்சாப்பின் ஜலந்தர் போலீசார், அகன்ஷாவின் பெற்றோரை தொடர்புகொண்டு உங்களது மகள் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். அத்துடன் உடனடியாக புறப்பட்டு வரும்படியும் கூறி உள்ளனர். இதனை கேட்டு அகன்ஷாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அகன்ஷாவின் தந்தை உடனடியாக தர்மஸ்தலாவில் இருந்து பஞ்சாப்புக்கு புறப்பட்டு சென்றார். மங்களூரு விமான நிலையத்தில் வைத்து அவரை ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அகன்ஷாவின் தந்தை தனது மகள் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள் என்றும், இது கொலையாக இருக்கலாம் என்றும், முறையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினார்.

மேலும் பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article