சென்னை: அமெரிக்கா செய்வது தவறு என்று சுட்டி காட்டாமல் பிரதமர் மோடி மவுனியாக இருக்கிறார் என்று ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறிய இந்தியர்களை மனிதாபிமானமற்ற முறையில் கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்தவகையில், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தவறிய ஒன்றிய பாஜ அரசின் அலட்சிய போக்கை கண்டிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், டி.செல்வம், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன், டில்லிபாபு, ஆர்டிஐ பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், மாவட்ட தலைவர் பா.சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கைகளில் விலங்குகள் பூட்டியபடி பங்கேற்றனர். மேலும், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டன உரையாற்றினார்.
அதை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவில் அனுமதி இல்லாமல் குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் பணியை மேற்கொண்டு உள்ளது. அதன்படி, சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு, இடுப்பு விலங்கு இட்டு அவமானப்படுத்தி இந்தியர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். குற்றவாளிகளை நடத்துவது போல் நடத்தி அனுப்பி இருக்கிறார்கள். ஒன்றிய பாஜ அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் மோடி ஏன்? இதுவரை வாய் திறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post அமெரிக்கா தவறை சுட்டி காட்டாமல் பிரதமர் மோடி மவுனியாக இருப்பது ஏன்?.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.