
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7 நாட்களாக அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி மற்றும் அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி வருகின்றனர்.
இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்க்கோ ரூபியோவுடன் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து அவர் மேற்கோள் காட்டினார்.
அதே சமயம், தெற்கு ஆசியாவில் பதற்றங்களை தணிக்கவும், அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும் என மார்கோ ரூபியோ கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி பிட்டே ஹெக்செத் உடன் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.