பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி 'தமிழ் வெல்லும்' என்ற தலைப்பில் போட்டிகள் - தமிழக அரசு அறிவிப்பு

3 hours ago 3

சென்னை,

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி 'தமிழ் வெல்லும்' என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி- 110ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 29-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். அதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக "தமிழ் வெல்லும்" என்னும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" போன்ற புகழ் பெற்ற கவிதை வரிகளால் பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன், 'புரட்சிக்கவி' என்றும், 'பாவேந்தர்' என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றியவர் பாரதிதாசன்.

தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையன்று. தனது படைப்புகளுக்காக 'சாகித்திய அகாடமி விருது' பெற்றவர். பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் அவருக்கிருந்த பற்று என்றளவும் நிலைத்து நிற்கும். அவரது தலைசிறந்த படைப்புகள்ளை இன்றைய இளந்தலைமுறையினர் அவசியம் கற்றுணர வேண்டிய ஒன்று.

பாரதியாரிடம் நட்பு கொண்ட காரணத்தால் பாரதிதாசன் என்ற புனைபெயரிலேயே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அவருடைய கவிதைகள் சாதி ஒழிப்பு, கல்விச் சமத்துவம், பெண்கள் உரிமை, மொழிப் பாதுகாப்பு, பண்பாட்டு எழுச்சி போன்ற கருத்துகளால் நிரம்பியவை. தனி மனித சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் தமது கவிதைகளில் போதித்தவர் பாரதிதாசன்.

தமிழையும், திராவிட அடையாளத்தையும் நெஞ்சில் கொண்டு நடை போட்டார். தமிழை வளர்த்தல் ஒன்று, சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்து தந்தவர் புரட்சிக் கவி அவர்கள். மொழிமானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

அவரது படைப்புகளில் இயற்கையின் அழகு மட்டுமல்ல, மக்களின் வாழ்வும் தமிழ் உணர்வும், சமூகத்தின் நடுநிலையும் நன்கு பிரதிபலிக்கின்றன. பொதுவாக, பாரதிதாசனின் இலக்கியங்கள் கற்பனைச் சிற்பங்கள் அல்ல; அவை மண்ணோடும், மக்களோடும் அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள். திராவிட செம்மொழி இயக்கத்திலும் தமிழ் உரிமை போராட்டத்திலும் அவரது பங்களிப்பு போற்றப்படவேண்டியது.

"தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று தமிழைப் உயிராகப் போற்றியவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக "தமிழ் வெல்லும்" என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

போட்டிகள் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு:-

போட்டி 1: பேச்சுப் போட்டி

தலைப்புகள்:

· தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

· உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!

· பாரடா உனது மானிடப் பரப்பை!

· எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ஒரு கதை சொல்லட்டுமா

வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்).

போட்டி 2: கவிதைப் போட்டி

தலைப்புகள்:

· தமிழே! தமிழர் உயிரே!

· வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு!

· இனிமைத் தமிழ்மொழி எமது!

· தமிழும் நானும்

நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 1 பக்க அளவில் கவிதைகள் அமைதல் வேண்டும்.

கவிதைகளை எழுதி PDF கோப்பாக அனுப்ப வேண்டும்

போட்டி 3: கட்டுரைப் போட்டி

தலைப்புகள்:

· புதியதோர் உலகு செய்வோம்

· துறைதோறும் தொண்டு செய்வாய்!

· அறிவை விரிவு செய்!

· மாபெரும் தமிழ்க் கனவு

நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.

கட்டுரைகளை எழுதி PDF கோப்பாக அனுப்ப வேண்டும்

போட்டி 4: ஓவியப் போட்டி

பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்களைக் கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைதல் வேண்டும்.

ஓவியங்களை PDF கோப்பாக அனுப்ப வேண்டும்

போட்டி 5: ஒப்பித்தல் போட்டி

தலைப்பு:

· பாவேந்தரின் 'தமிழியக்கம் நூலிலிருந்து 1(கரும்பு தந்த தீஞ்சாறே), 3 (ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்) பாடல்களைப் பரிந்துரைக்கலாம்.

குறித்து பதிவிட வேண்டும்.

வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்).

போட்டியில் கலந்து கொள்பவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் கீழ்கண்ட விரைவு துலங்கள் குறியீடு (QR code) வாயிலாகவும் படைப்புகளை மே- 31 ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article