டெல்லி: அதானி குழுமத்தின் இயக்குனர்கள் மீதான அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அதானி குழுமத்தின் இயக்குனர்கள் மீதான அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் நிரபராதிகள் என அமெரிக்க நீதித்துறையே குறிப்பிட்டுள்ளது. அனைத்து அதிகார வரம்பிலும் வெளிப்படை தன்மை, விதிமுறைகளை பின்பற்றி வருகிறோம். எனவே, அமெரிக்க நீதிமன்றம் முன்வைத்த குற்றசாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
அதானி குழுமம் எப்போதும், அதன் செயல்பாடுகளின் அனைத்து அதிகார வரம்புகளிலும் உயர்ந்த நிலையான ஆளுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பின்பற்றுவதை உறுதி செய்திருக்கிறது. எனவே, எங்களது பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒன்றை உறுதியளிக்கிறோம், அதாவது, அதானி குழும நிறுவனமானது அனைத்துச் சட்டங்களுக்கு உள்பட்டு இயங்குவதோடு, மிகக் கட்டுக்கோப்பான நிறுவனமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே: அதானி குழுமம் அறிக்கை appeared first on Dinakaran.