அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி; டிரம்ப் மீண்டும் அதிபர் ஆகிறார்: 3.5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி

1 week ago 3


வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிபராக உள்ள டிரம்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 8.2 கோடி பேர் தபால் மூலமாகவும் நேரிலும் தேர்தல் நாளுக்கு முன்பாகவே தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தேர்தல் நாளான நேற்று முன்தினமும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். புளோரிடாவில் டிரம்ப் தனது வாக்கை பதிவு செய்தார். கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவில் தபால் மூலம் முன்கூட்டியே வாக்கை செலுத்தியிருந்தார். இந்திய நேரப்படி வாக்குப்பதிவு நேற்று காலை முடிந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இம்முறை கமலா ஹாரிஸ் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பல கருத்துக்கணிப்புகள் கூறியிருந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் கட்சி முன்னிலை வகித்தது. கமலா ஹாரிஸ் கடும் போட்டி தந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஒருமுறை கூட டிரம்ப்பை முந்தவில்லை.

அதிபரை முடிவு செய்யும் யுத்தகளமான 7 மாகாணங்களில் கூட டிரம்ப் ஆதிக்கம் செலுத்தினார். கலிபோர்னியா, இல்லியானிஸ், நியூயார்க், டெலாவர், விர்ஜினியா போன்ற இடங்களில் கமலா வெற்றி பெற்றாலும், முக்கிய மாகாணங்களான பென்சில்வேனியா, வட கரோலினா, ஜார்ஜியா, விஸ்கான்சின் போன்றவற்றை டிரம்ப் கைப்பற்றினார். மொத்தம் 50 மாகாணங்களில் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் வெற்றி பெற 270 இடங்களை கைப்பற்ற வேண்டும். இதில் கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் பெரும்பான்மை இடங்களை டிரம்ப் கட்சி எட்டியது. இதன் மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஏற்கனவே கடந்த 2016 முதல் 2021 வரை அதிபராக இருந்த டிரம்ப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2வது முறையாக அதிபராக உள்ளார்.

மொத்தம் 501 இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், டிரம்ப் 277 இடங்களையும், கமலா ஹாரிஸ் 224 இடங்களையும் கைப்பற்றினர். டிரம்பை விட வெறும் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து புளோரிடாவில் தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ‘‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டது’’ என உற்சாகமாக பேசினார். மீண்டும் அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப்புக்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், துருக்கி அதிபர் எர்டோகன்,

கத்தாரின் அமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி, எகிப்து அதிபர் அப்தேல் பத்தா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயஹான் சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சீனா, நேட்டோ படைகளும் டிரம்ப்புக்கு வாழ்த்து கூறின. தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக டிரம்பும், துணை அதிபராக ஜே.டி.வான்சும் பதவி ஏற்க உள்ளனர். மேற்கு ஆசியாவிலும், ரஷ்யா, உக்ரைன் இடையேயும் போர் சூழலுக்கு மத்தியில் மீண்டும் டிரம்ப் அதிபராகி இருப்பது, அமெரிக்காவிலும், உலக அளவிலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

‘இனி பொற்கால ஆட்சி’
அதிபராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புளோரிடாவில் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் மேடை ஏறி, உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டிரம்ப் பேசியதாவது: இனிவரும் காலம் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். எங்கள் பணி, செயல்பாடு அப்படி இருக்கும். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த என் மனைவி மெலானியா, துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் மற்றும் என் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி, யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம்.

ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம். மீண்டும் வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி’’ என்றார். மேலும், டிரம்ப்பை ஆதரித்த உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு நன்றி கூறிய டிரம்ப், ‘‘அவர் ஒரு ஜீனியஸ். நட்சத்திர நாயகன். அவரை நாம் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

வெற்றி பெற்ற இந்தியர்கள்
அமெரிக்காவில் நடந்த பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்று அசத்தினர். ஜனநாயக கட்சியை சேர்ந்த வழக்கறிஞரான சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். தற்போது, செனட் சபை உறுப்பினராக இருக்கும் இவர், ஒபாமா அதிபராக இருந்த போது, அவரின் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்சில் களமிறங்கிய ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். இவர் 5வது முறையாக தேர்வாகி உள்ளார். கலிபோர்னியாவில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ரோ கண்ணா வெற்றி பெற்றார். ஏற்கனவே இவர் எம்பியாக இருந்தவர். வாஷிங்டனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிரமிளா ஜெயபால், 5வது முறையாக எம்பி ஆனார். மிச்சிகனில் ஜனநாயக கட்சியின் ஸ்ரீதனேதார், கலிபோர்னியாவில் அமி பெரா, நியூயார்க்கில் ஜெரேமி கூனே ஆகியோர் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார்.

The post அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி; டிரம்ப் மீண்டும் அதிபர் ஆகிறார்: 3.5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி appeared first on Dinakaran.

Read Entire Article