வாஷிங்டன்,
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.இதையடுத்து, அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் மாலை வாணவேடிக்கைகளுடன் தொடங்கின.அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கிறது.
அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) பதவியேற்பு விழா நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரை ஆற்றுவார். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்ள இருக்கிறார்.