அமிர்தி மினி உயிரியல் பூங்காவில் ஒரே நாளில் 7,940 பேர் திரண்டனர் ₹2.66 லட்சம் வருவாய் கிடைத்தது காணும் பொங்கலை முன்னிட்டு

3 hours ago 2

வேலூர், ஜன.17: காணும் பொங்கலை முன்னிட்டு வேலூர் அடுத்த அமிர்தி மினி உயிரியல் பூங்காவில் வெளியூர் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் குடும்பத்துடன் திரண்டு பொழுது போக்கினர். வேலூரில் இருந்து 28 கி.மீ தூரத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் ஜவ்வாது மலையடிவாரத்தில் மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமிர்தி மினி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பல வகை மான்கள், மயில், செங்கால் நாரைகள், கொக்கு, பல வண்ண கிளிகள், எறும்புத்தின்னி, நரி, முதலை, ஊர்வன வகைகள் ஆகியவை பார்வைக்காக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற சறுக்குமரம், ஊஞ்சல் என பல்வேறு விளையாட்டு அம்சங்களும் இப்பூங்காவில் அமைந்துள்ளன.

அதோடு மூலிகைப்பண்ணையும் இங்கு உண்டு. இதுதவிர அமிர்தி நீர்வீழ்ச்சியும் அதோடு இணைந்த நாகநதி ஆறும் குழந்தைகள் துள்ளி விளையாட ஏதுவான அம்சமாக இங்கு அமைந்துள்ளது. இதனால் இங்கு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர் மற்றும் புரம் பொற்கோயிலையும், வேலூர் கோட்டையையும் காண வரும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் கூட தற்போது அமிர்தி மினி உயிரியல் பூங்காவை பார்வையிட வருகின்றனர்.

இதனால் இங்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு வேலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் குடும்பத்துடன் அமிர்தியில் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் குழந்தைகள், பெரியவர்கள் என மொத்தம் 7,940 பேர் அமிர்தி மினி உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். இவர்கள் மூலமும், இவர்கள் வந்த வாகன நுழைவுக்கட்டணம் மூலமும் மொத்தம் நேற்று ஒரே நாளில் ₹2 லட்சத்து 66 ஆயிரம் வருவாயாக கிடைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அமிர்தி மினி உயிரியல் பூங்காவில் ஒரே நாளில் 7,940 பேர் திரண்டனர் ₹2.66 லட்சம் வருவாய் கிடைத்தது காணும் பொங்கலை முன்னிட்டு appeared first on Dinakaran.

Read Entire Article