புதுடெல்லி,
அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அரசியல் சாசனம் குறித்த கருத்துகளை விமர்சித்துள்ளார். முன்னதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சட்ட மேதை அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் 'ஜெய் பீம்.. ஜெய் பீம்..' என முழக்கமிட்டனர். இதனால், அவையை நடத்தமுடியாமல், நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று மாலை, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அம்பேத்கர் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பு அனைவரும் அறிந்ததே" என்றும் "எனது கருத்தை திரித்து வெளியிடுகின்றனர்" என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரிடம் அமித்ஷாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், "பா.ஜனதா உருவாகும் முன், அதன் முன்னோடிகளான ஜனசங்கமும், ஆர்.எஸ்.எஸ்-ம், அரசியல் சாசனம் ஏற்கப்படும்போது அம்பேத்கரை எதிர்த்தன. அந்த வகையில் அமித்ஷாவின் தற்போதைய பேச்சு பா.ஜனதாவின் அதே பழைய மனநிலையை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.
அதில் புதிதாக எதுவும் இல்லை. அவர்களால் பழைய திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் அம்பேத்கர். எனவே அவர்கள் அம்பேத்கரை இழிவுபடுத்தும் செயலை தொடர்ந்து செய்வார்கள்" என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.