அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடை மூலம் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

4 hours ago 1

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து கொண்டிருக்கிற ஆட்சி 2021லிருந்து தொடர்ந்து மக்கள் மத்தியில் செல்வாக்கோடும் இருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் 2021க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று வருகிறது.

இதை கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் எப்படியாவது இந்த அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இன்னும் தேர்தலுக்கு ஏழு மாதமே இருக்கிற வேளையில் அமலாக்கத் துறையின் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து பல காலமாக டாஸ்மாக் பற்றி பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதை மறைத்துவிட்டு, திமுகவின் மீது பழிசுமத்துகிற வகையில் அமலாக்கத்துறை மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடுவதும், பாஜவினுடைய தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதும் தொடர்ந்து வாடிக்கையாக இருந்து வருக்கிறது. அதற்கெல்லாம் ஒரு சம்மட்டி அடி கொடுப்பதைப் போல உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது. ஆகவே, இந்த தீர்ப்பை திமுக வரவேற்கிறது.

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றமே தடை கொடுத்துவிட்ட பிறகு, வேறு ஒன்றும் தேவையில்லை. கேரளாவில் 2 கோடி அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றபோது பிடிபட்டார். அதனால், அந்த மாநிலத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் விசாரிக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு டாக்டரிடம் திண்டுக்கல்லில் லஞ்சம் கேட்டு, அமலாக்கத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கினர். ஆகவே, அமலாக்கத்துறை என்பது பிளாக்மெய்லிங் ஆர்கனைசேஷன் மாதிரி இந்தியா முழுவதும் செயல்படுவதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடை மூலம் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article