அமராவதி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

6 months ago 20

கரூர்,

அமராவதி அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி வட்டம், பெரிய ஆண்டாங்கோவில், அணைப்பாளையம் மற்றும் ஒத்தமாந்துறை ஆகிய பகுதிகளில் அமராவதி அணையில் அதிகளவு தண்ணீர் செல்வதை மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை தனது முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நலனை கருதி சுமார், 4,000 கனஅடிநீர் செல்வதால் உபநதிகள் நிரம்பியுள்ளது. அமராவதி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 87.50 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 11.522 கனஅடியாகவும், அணையின் நீர்வெளியேற்றம் 11.375 ஆகவும் உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 15 மி.மீ மழை பெய்துள்ளது.

இன்று காலை 11.45 மணி நிலவரப்படி, ஆண்டாங்கோவில் தடுப்பணையின் நீர் வரத்து 44,421 கனஅடியாக உள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, சுயபடம் எடுப்பது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் மற்றும் நீர் நிலைகளின் கொள்ளளவை தொடர்ந்து கண்காணித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமராவதி அணையின் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article