தங்க அங்கி அலங்காரம்.. பூரி ஜெகநாதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

1 day ago 4

ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஜெகநாதர் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. ரத யாத்திரையைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் படையெடுப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் மூலவர்கள் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி ஆகியோருக்கு புதிய தேர்கள் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வர, விமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

9 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குந்திச்சா கோவிலை சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை நிறைவுபெறும். மறுநாள் தங்க அங்கி அலங்காரத்தில் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இந்த தங்க அங்கிகளின் எடை 208 கிலோ ஆகும். இந்த தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவிலை (குண்டிச்சா கோவில்) அடைந்து ஒரு வார காலம் ஓய்வெடுத்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பி வரும் பகுதா யாத்திரை நேற்று நடைபெற்றது. மூன்று தேர்களும் கோவிலை வந்தடைந்தன. கோவிலின் சிங்க துவாரம் எனப்படும் முன்பக்க வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரத யாத்திரையின் நிறைவு நிகழ்வான 'சுனா பேஷா' எனப்படும் தங்க அங்கி அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் பூரி நகரில் குவிந்துள்ளனர். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தை ஒழுங்குபடுத்த்த டிரோன்கள் மற்றும் ஏ.ஐ. மூலம் செயல்படும் கேமராக்களை பயன்படுத்துவதாக ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது. அதற்கேற்ப திட்டங்களை வகுத்து, போக்குவரத்து ஆலோசனையை பின்பற்றுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Read Entire Article