
பர்மிங்காம்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 28 ரன்னுடனும், கருண் நாயர் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் (162 பந்து, 13 பந்து, 8 சிக்சர்) சோயிப் பஷீர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்துள்ளது. ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. அதேவேளை இந்தியா வெற்றி பெற 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இதனிடையே பர்மிங்காமில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை குறிப்பிட்ட நேரத்தில் (இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு) தொடங்குவதில் தாமதம் ஏபட்டது. இந்நிலையில் தற்போது மழை நின்றதையடுத்து ஆட்டம் சுமார் 1.5 மணி நேரம் தாமதமாக தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்திற்கு 80 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.