'அமரன்' படத்தை பாராட்டிய நடிகை ஜோதிகா!

2 months ago 13

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியாகின. திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின் சிறப்பு காட்சியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 'அமரன்' படத்தை பாராட்டினார். இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிராமணரான முகுந்த் வரதராஜனை திரைப்படத்தில் அடையாளப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் எழுந்தது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஜோதிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமரன் படத்தைக் குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அமரன் படக்குழுவினருக்கு சல்யூட். ஜெய்பீமுக்குப் பின் தமிழின் உன்னதமான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் வைரத்தைப் படைத்திருக்கிறீர்கள். நடிகர் சிவகார்த்திகேயன் இக்கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்ததை நினைத்துப் பார்க்க முடிகிறது. சாய் பல்லவி என்னவொரு நடிகை? கடைசி 10 நிமிடங்களில் என் இதயத்தைப் உலுக்கிவிட்டீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. திருமதி இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்களின் தியாகமும் நேர்மறையான எண்ணமும் எங்களின் இதயங்களைத் தொட்டுவிட்டது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களைக் கொண்டாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்; உங்களைப்போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்களே, தயவுசெய்து இந்த வைரத்தை தவறவீடாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

ஜோதிகாவின் இந்த வாழ்த்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட அமரன் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read Entire Article