
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன்களும், பட்லர் 64 ரன்களும், சாய் சுதர்சன் 48 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 225 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் குஜராத் 38 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அபிஷேக் சர்மா 74 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி கொண்டிருந்த அபிஷேக் சர்மா 14-வது ஓவரின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிசியோவிடம் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். அப்போது தரையில் அமர்ந்திருந்த அவரை குஜராத் கேப்டன் சுப்மன் கில் 'வேகமாக எழுந்திரு' என்பது போல் ஜாலியாக காலால் எட்டி உதைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.