சென்னை: மாநில தகுதி தேர்வு நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் கலந்தாலோசனை நடத்தினார். யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநில தகுதி தேர்வு (SET) வருகின்ற 2025 மார்ச் மாதம் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் சிபிடி (Computer Based Test) மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 133 தேர்வு மையங்களில் 99,178 தேர்வர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கான நுழைவுச்சீட்டு மற்றும் பயிற்சி தேர்வுக்கான இணையதளம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் 18004256753 என்ற இலவச உதவி எண் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தங்கள் தேர்வு சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் சந்தேகங்களை தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
இத்தேர்வினை எந்தவித தடைகளும் இல்லாமல் நடத்திட தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் காணொளி காட்சி வாயிலாக நேற்று கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்வு சிறப்பாக நடத்திட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட தலைமை செயலாளர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் உயர்கல்வி துறை செயலாளர் சமயமூர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, கல்லூரி கல்வி ஆணையர், எ.சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் மாநில தகுதி தேர்வு நடத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.