மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (24.01.2025) சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில், எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக, பாதிப்படைந்த சுமார் 12,265 மின் கம்பங்கள், 343 பில்லர் பெட்டிகள், 680.86 கி,மீ மின் கம்பிகள், 485 மின்மாற்றிகள் மற்றும் 16 துணை மின் நிலையங்களை போர்க்கால அடிப்படையில் மின் விநியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு குறுகிய காலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் சீரான மின்சாரம் வழங்கியதற்காக அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு மின்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இதுவரை 48 துணை மின் நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன, 20 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும், இயக்கத்தில் உள்ள 260 திறன் மின் மாற்றிகளின் (Power Transformer) தரம் உயர்த்தப்பட்டுள்ளன, 22 திறன் மின் மாற்றிகளின் தரம் உயர்த்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மேலும், அதிகரித்து வரும் மின் தேவையினை கருத்தில் கொண்டு கூடுதலாக அமைக்க வேண்டிய புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் திறன் மின் மாற்றிகள் குறித்தும், குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் மின் தேவையினை கருத்தில் கொண்டு நிறுவப்பட உள்ள துணை மின் நிலையங்கள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
மின் பகிர்மான வட்டம் வாரியாக விரிவான ஆய்வினை மேற்கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் வட்ட அளவில் அதிக அளவு மின் தடைகள், மின்மாற்றிகள் பழுது மற்றும் மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் கொண்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் தமது பணிகளில் தனிக்கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகள் ஆகியவற்றில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தனிக்கவனம் செலுத்தி, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் மின்நுகர்வோரிடமிருந்து வரும் புகார்களை குறைப்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சாரத்துறை அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்கு மின்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.க.நந்தகுமார், இ.ஆ.ப., இணை மேலாண்மை இயக்குநர்(நிதி) திரு.விஷு மஹாஜன், இ.ஆ.ப, மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் திருமதி கே.இந்திராணி, இயக்குநர் (பகிர்மானம்) திரு.அ.ரா.மாஸ்கர்னஸ், மின் பகிர்மானக் கழக இயக்குநர் திருமதி கே.மலர்விழி மற்றும் உயர் அலுவலர்கள், உள்ளிட்ட அனைத்து இயக்குநர்கள், மண்டல தலைமைப் பொறியாளர்கள், மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
The post அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்தாய்வு! appeared first on Dinakaran.