கொள்ளிடம் அருகே உமையாபதி கிராமத்தில் அரசு மானியத்தில் பசுமை குடில் வெள்ளரி சாகுபடி

3 hours ago 1

*மயிலாடுதுறை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே உமையாபதி கிராமத்தில் உயர் தொழில்நுட்ப உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் உயர்தொழில்நுட்ப உற்பத்தி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மானிய உதவி பெற்று பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடி செய்து வருவதை “நிறைந்தது மனம்”; திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து பயனாளியான விவசாயியுடன் கலந்துரையாடி அரசு திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 2024-2025ம் திட்டத்தின் கீழ் உயர் தொழில்நுட்ப உற்பத்தி மேம்பாட்டு திட்டம் 2024-2025 பசுமை குடில் 2000 ச.மீ. அமைத்து வெள்ளரி சாகுபடிக்காக ரூ.8,90,000 வினாயகம் என்ற விவசாயிக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டது. அந்தவகையில், விவசாயி வினாயகம் சிறப்பாக பசுமை குடில் வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார்.

இதனை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மானிய உதவி தொகை மூலம் மேற்கொண்டுள்ள சாகுபடி பணிகள் மற்றும் பெறப்படும் வருமானம் குறித்து கேட்டறிந்தார்.

அந்த வகையில், விவசாயிக்கு பசுமை குடிலிலிருந்து 160 நாட்களில் சராசரியாக ரூ.12 முதல் 15 லட்சம் வரை நிகர வருமானம் கிடைக்கிறது. மேலும், செண்டுமல்லி சாகுபடியும் 1 ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் செண்டுமல்லி செடிகள் நடவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. செண்டுமல்லி சாகுபடிகளையும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2024-2025-ம் ஆண்டில் பிரதம மந்திரியின் விவசாயிக்கான நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் 148 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசனம் மற்றும் மழைத்தூவான்;

கருவிகளும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடமாடும் காய்கறி வாகனமும், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வெங்காயம் பந்தல் சாகுபடி, காய்கறி சாகுபடிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.1 கோடியே 41 லட்சமும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் 322 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் பனை விதைகள், பனை கன்றுகளும்,

மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 892 பயனாளிகளுக்கு காய்கறி சாகுபடி, தென்னை சாகுபடி, மலர் சாகுபடி மேற்கொள்ள பின்னேற்பு மானியமாக ரூ.50 லட்சத்து 59 ஆயிரமும், கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 9496 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான 5 வகையான பழச்செடிகள் (மா, கொய்யா, நெல்லி, சீதா, எலுமிச்சை) ஆகியவைகள் அடங்கிய தொகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் வெள்ளரி சாகுபடி விவசாயி கூறுகையில்,நான் பாரம்பரிய விவசாயி. என்போன்ற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் மூலம் நலத்திட்டங்களை வழங்கி வரும் தமிழக முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தோட்டக்கலை துறையின் உதவி இயக்குநர் ரமேஷ், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் உடன் இருந்தனர்.

The post கொள்ளிடம் அருகே உமையாபதி கிராமத்தில் அரசு மானியத்தில் பசுமை குடில் வெள்ளரி சாகுபடி appeared first on Dinakaran.

Read Entire Article