பவானி : பவானி ஊராட்சி ஒன்றியம், தொட்டிபாளையம் ஊராட்சி, ஊராட்சிக்கோட்டை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்,மருத்துவ கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டு வருகிறது.இதனால், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பவானி – அந்தியூர் ரோடு, தொட்டிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, பவானி – மேட்டூர் ரோடு ஊராட்சிக்கோட்டை பஸ் நிறுத்தத்திற்கு இடையில் விவசாய நிலங்கள் வழியாக 3 கி.மீ தொலைவுக்கு தார்ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் இருபுறமும் மேட்டூர் வலதுகரை வாய்க்கால் செல்வதால், பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் மேட்டூர் மெயின் வாய்க்கால் தொடங்கி வேதகிரிபுரம் சாய்பாபா கோயில் வரையில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் பிளாஸ்டிக் கழிவுகள்,பயனற்ற கட்டட கழிவுகள், தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் கரி,சாம்பல், விவசாயத் தோட்டங்களிலிருந்து பயனற்ற தென்னை, வாழைமரக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளும் கொட்டப்படுகிறது.
மேலும், தொட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், பீங்கான், டியூப் லைட் மற்றும் இதர கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் கொட்டுகின்றனர். இதுதவிர, வாகனங்களில் கொண்டு வந்து இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகள்,கோழி இறைச்சிக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் கழிவுகளால் நிறைந்து காணப்படுகிறது.
இவை தீ வைத்து எரிக்கப்படுவதால் கரும்புகை கிளம்பி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மக்கும், மக்காத கழிவுகள் காற்றில் பறந்து சென்று விவசாய நிலங்களுக்குள் விழுந்து வருகிறது. இதனால்,விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், தொட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், பிற பகுதிகளில் இருந்தும் சரக்கு வாகனங்களில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
இந்த ரோடு முழுவதும் கழிவுகளால் நிறைந்து காணப்படுகிறது.இந்த ரோட்டின் இருபுறமும் விவசாய நிலங்கள் மட்டுமே உள்ள நிலையில், கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்தால் குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளது. கொட்டி குவிக்கப்படும் கழிவுகள் அருகாமையில் உள்ள மேட்டூர் பாசன வாய்க்காலில் விழுந்து, தண்ணீர் திறப்படும்போது அடித்துச் செல்லப்படுகிறது. விவசாய விளைநிலங்கள் மட்டுமே உள்ள இப்பகுதியில், பிற பகுதிகளில் இருந்து கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க வேண்டும்.
சுற்றுச் சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.குடியிருப்புப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் அப்பகுதியிலேயே அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம்,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
The post ஊராட்சிக்கோட்டை அருகே குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் விளை நிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் புகார் appeared first on Dinakaran.