அனுமதி பெறாத படிப்புகளை நடத்தி சிக்கலில் சிக்கியிருக்கும் பல்கலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 weeks ago 4

‘‘மனநிலையை அறிந்து காரியத்தை கச்சிதமா முடித்து விடலாம் என இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த வைத்தியானவரின் வீட்டில் ஈடி ரெய்டுக்கு பிறகு டெல்டாவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சேலத்துக்காரர் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.. வைத்தியானவர் எந்த மாதிரி மனநிலையில் இருக்கிறரார் என்பதை தெரிந்து கொள்ள, இலை கட்சியின் நிர்வாகிகள் தீவிரமாக உள்ளார்களாம்.. ஒருவேளை அவரது மனநிலையில் மாற்றம் இருந்தால், அவரை எளிதாக அணுகி ‘காரியத்தை முடித்து விடலாம்’ என இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம்… நேரில் சென்று பார்ப்பது போல், இலை கட்சியின் நிர்வாகிகள் சிலர், அவரை பார்த்து வருகிறார்களாம்… இதன் மூலம் அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என இலை கட்சியின் நிர்வாகிகள் நினைக்கிறார்களாம்.. என்றார் விக்கியானந்தா.
‘‘பிரச்னைக்கு மேல பிரச்னை வெடிக்கும் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாத படிப்புகளை நடத்திய விவகாரம் மீண்டும் வெளிவந்திருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்று வெறும் டிப்ளமோ படிப்பிற்கு அனுமதி பெற்று பட்டப்படிப்புகளை நடத்திய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கு.. இந்த விவகாரம் குறித்து கல்லூரி வளர்ச்சி குழு விசாரணை வரை வந்துருக்காம்.. இதுகுறித்து தகவல் வெளியான நிலையில் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேறு சில கல்லூரிகளும், இதே போல் ஒரு சில படிப்புகளுக்கு அனுமதி பெற்று அனுமதி பெறாத சில படிப்புகளை நடத்துவதாக புகார்கள் குவிகின்றனவாம்.. ஏற்கனவே, தூங்கா நகரத்து பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பிரச்னையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரின் நிழலானவர் கல்வி நிறுவனங்களில் நடந்த சோதனையால் பயந்து போன இலைக்கட்சி முக்கிய நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சோகம்பற்றி தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் நிழலானவரின் கல்வி நிலையங்களில் ஐந்து நாட்கள் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி மலைத்துப்போன விவகாரம் எல்லாம் தெரிந்த விஷயம்தான்.. ஆனால் தெரியாத விஷயம் ரொம்பவே இருப்பதாக இலைக்கட்சி தொண்டர்கள் பேசிக்கிறாங்க.. இலைக்கட்சி தலைவரின் நிழலாக அவர் இருப்பதால் மாநிலம் முழுவதும் சத்தமில்லாமல் செல்வாக்கை வளர்த்துக்கிட்டாராம்.. மாங்கனி மாவட்டத்துல குடியிருந்தாலும் மலைக்கோட்டை இலைக்கட்சி நிர்வாகத்தில் அவரது செல்வாக்கு ரொம்பவே அதிகமாம்.. அங்கு தான் நிழலானவரின் கல்லூரிகள் இருக்கு.. அதே நேரத்துல நிழலானவரின் சம்பந்தி கோவையில் பெரும் தொழிலதிபர் என்பதால் வருமானவரித்துறை அங்கிருந்து விசாரணைய தொடங்கியிருக்காங்க.. அதோடு மட்டுமல்லாமல் நிழலானவரின் அறக்கட்டளைக்கு ரொம்பவும் நல்ல மனம் படைத்தவர்கள் நிலம் கொடுத்தாங்களாம்.. அதுல ரொம்பவே ஈடுபாடாக இருந்தவர்தான் சேலம் ஆத்தூர் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த இலைக்கட்சி முக்கிய நிர்வாகியாம்.. நிழலாவனரின் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்த நேரத்துல அந்த நிர்வாகியின் வீட்டிலும் சோதனை நடத்துவாங்கன்னு இலைக்கட்சிகாரங்க ரொம்பவே எதிர்பார்த்தாங்களாம்.. ஆனால் அங்க ரெய்டு நடக்கலையாம்.. அதே நேரத்துல வருமானவரித்துறை ரெய்டு நடந்தபோது, அந்த நிர்வாகி ரொம்பவே பயந்து போயிட்டாராம்.. தன்னையும் விசாரணைக்கு அழைச்சிடுவாங்களோ என்று பதற்றமாவே இருந்ததா கட்சிக்காரங்க சொல்றாங்க.. அந்நேரத்தில் மலைக்கோட்டையில நடந்த இலைக்கட்சி ஊழியர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நிழலானவரு கலந்துக்கிட்டாராம்.. அவருடன் அந்த நிர்வாகியும் போயிருக்காரு.. பிறகு அவருடன் வீட்டிற்கு வந்த நேரத்துல திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அந்த நிர்வாகி இறந்து போயிருக்காரு.. இதனால இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம்.. நல்லா இருந்தவரு எப்படி திடீரென உயிரிழந்தாரு என்ற கேள்வியோடு தம்மம்பட்டியை சுத்தி சுத்தி வாராங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலை செய்ய வேண்டியவரு வேலை செய்யாவிட்டாலும் மாதந்தோறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போக வேண்டியது போய்க்கிட்டு இருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் அமிர்தி சாலை பென் ஆத்தூர் பகுதியில் டாஸ்மாக் இயங்கி வருது.. இந்த கடையில் சேல்ஸ்மேனாக ஒருத்தரை நியமிச்சிருக்காங்க.. அவரு கடைக்கு சென்று வேலை செய்வதே இல்லையாம்.. அவருக்கு பதிலாக இன்னொருத்தரை சேல்ஸ்மேனாக அவரே நியமிச்சிருக்காராம்.. கடை திறக்கும் போது இவரை அழைத்து சென்று கடையில் விட்டுவிட்டு, இரவு சேல்ஸ் முடிஞ்சதும், இவரே வண்டியில அழைச்சிட்டு போறாராம்.. வேலை செய்ய வேண்டியவரு, வேலை செய்யாம ஊர் சுற்றி வருகிறாராம்.. 2 வருஷமா இப்படித்தான் ஆள்மாறாட்டம் செய்து விற்பனை நடக்குதாம்.. புகார்களும் போனதாம்.. அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடிச்சும் நடவடிக்கை இல்லையாம்.. காரணம், மாதந்தோறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போக வேண்டியது போகுதாம்.. இந்த கடை மட்டும் இல்லையாம்.. மாவட்டத்தில பல கடைகள்ல ஆள்மாறாட்டம் செய்து தான் வேலை செய்றாங்களாம்.. இதனால அரசுக்கு வரவேண்டிய வருவாய் சரியாக போறதில்லைன்னு புகார் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post அனுமதி பெறாத படிப்புகளை நடத்தி சிக்கலில் சிக்கியிருக்கும் பல்கலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article