அனல் வெயிலில் வரும் அழகரை ‘குளிர்விப்பான்’

19 hours ago 3

மதுரையில் ஆன்மீக அடையாளமாகத் திகழும் ‘சித்திரை திருவிழா’ சுட்டெரிக்கும் கடும் வெயிலிலும் களைக்கட்டத் துவங்கியிருக்கிறது. சித்திரை மாதம் வந்து விட்டால் போதும். மதுரைக்காரர்கள் முகத்தில் திருவிழா களைப் பொங்கிப் பெருகும். ஒருபுறம் மீனாட்சி கோயில் திருவிழாக்கள் என்றால், மற்றொருபுறம் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வரும் அழகரின் வைகை ஆற்று எழுந்தருளல் என மதுரையின் ஒவ்வொரு வீடும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

பல லட்சம் பக்தர்கள்: மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அழகர்கோவிலில் வீற்றிருக்கும் சுந்தரராஜ பெருமாள் தனது தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண புறப்பட்டு மதுரை வரும்போது தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெறும். தொடர்ந்து வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவதைக் காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அழகரை குளிர்விக்க…: உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை (மே 12) அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதில் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்கு கள்ளழகர் வரும் முன்பே திருமணம் நடைபெற்றதால் கோபத்தில் திரும்பும் கள்ளழகரின் மனதை குளிர்விக்கும்விதமாகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், மழை வேண்டியும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அதில் கள்ளழகர் வேடம் அணிந்து வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாலை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது வழக்கம். அப்படி தண்ணீர் பீச்சி அடிக்கக்கூடிய ஆட்டுத்தோலால் ஆன பைதான் தோப்பரை என்று அழைக்கப்படுகிறது.

காரியாபட்டியில் தயாராகுது..: இந்த தொழிலை விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே காரியாபட்டி பகுதியில்தான் இந்த ஆட்டுத்தோலால் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தோப்பரைதயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரிய லாபம் ஒன்றும் இல்லை என்றால் கூட எங்களின் முன்னோர்கள் செய்த இந்த ஆன்மீக சேவையை நாங்களும் மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்கள் காரியாபட்டியை சேர்ந்த தோப்பரை வியாபாரிகள்.

கள்ளழகர் மீது பாசம்: தோப்பரை தயாரிக்கும் நபர்கள் சித்திரைத் திருவிழா தொடங்கும் மூன்று மாதத்திற்கு முன்பிலிருந்து விரதம் இருந்து ஆட்டு தோலை சேகரித்து பதப்படுத்தி தோப்பரை தயாரித்து வருகின்றனர். ஆட்டுத்தோலை பதப்படுத்தி தோப்பரையை தயாரிக்க வேண்டும். ஒரு தோலை பதப்படுத்த ரூ.200 முதல் ரூ.250 வரை செலவாகிறது. திண்டுக்கல் வரை செல்ல வேண்டியுள்ளதால், காரியாபட்டி பகுதியிலேயே தோலை பதப்படுத்துவதற்கு முறையான தண்ணீர், பதப்படுத்துவதற்கு தொட்டி வசதி செய்து தர வேண்டும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். மூன்று மாதம் நடைபெறும் இந்த தொழிலையே நம்பி, பலர் மாற்று வேலையை விட்டுவிட்டு இந்த வேலையை செய்து வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை விடாமல் தொடர வேண்டுமென்ற எண்ணமும், கள்ளழகர் மீதான பற்று, வேண்டுதலும் இதற்கு முக்கிய காரணமென்கின்றனர்.

தயாரிப்பது எப்படி: இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘இந்த ஆட்டுத்தோல்களை வாங்கி தண்ணீரில் சுண்ணாம்புக்கல் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதில் உள்ள உரோமங்களை எல்லாம் நீக்கிவிட்டு, நான்கு நாள் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரில் அலசி கத்தியை வைத்து சுரண்டி அதன் பிறகு ஆவாரம்பூ செடியை கொண்டு வந்து தண்ணீரில் தோலோடு ஊற வைத்து அதன் பிறகு கருவேலம்பட்டை, கடுக்காய் ஆகியவற்றையும் சேர்த்து மீண்டும் ஊற வைக்க வேண்டும்.

காய வைத்த பிறகு மீண்டும் தண்ணீரில் நனைக்க வேண்டும். தோலை விறைப்பாக்க வேண்டும். மேற்கண்ட நடைமுறைகளை செய்த பிறகு தான் ஆட்டு தோலை தோப்பரைக்கு ஏற்றார் போல் உருவாக்க முடியும். பாரம்பரியமாய் இந்த தொழில் எங்களுக்கு தெரிந்திருப்பதால், ஆட்டின் வலது கால் துளையில்தான் தண்ணீர் பீய்ச்சும் அமைப்பை உருவாக்க முடியும். பிறருக்கு இது குறித்து எதுவும் தெரியாது.அதன் பிறகு அங்கிருந்து மதுரைக்கு கொண்டு வரும்போது அதனை தைத்துக் கொடுப்பதற்கான கூலி என செலவுகள் மிக அதிகம். தோலின் அளவு தன்மையைப் பொறுத்து அதன் விலை 500 ரூபாயிலிருந்து ரூ.800 வரை ஆகும்.

சில தோல்கள் சிறியதாக இருக்கும். அவற்றால் எங்களுக்கு எந்தவித லாபமும் இருக்காது. ஆனால் அதற்காக வீணாக்காமல் வருகின்ற விலைக்கு விற்பனை செய்து விடுவோம். காரணம் இந்த தொழிலை நாங்கள் வருமானம் கருதி செய்யவில்லை. அழகுமலையானுக்கு நாங்கள் ஆற்றுகின்ற ஆன்மீக கடமையாகவே இதுவரை கருதி வருகிறோம். திருவிழாவுக்குத் தேவையான மாலையோ, சந்தனமோ, மற்ற சில பொருட்களோ வேறு எங்கும் வாங்கிவிட முடியும். ஆனால் இந்த தோப்பரை காரியாபட்டியில் மட்டும் தான் கிடைக்கும்” என்கின்றனர்.

The post அனல் வெயிலில் வரும் அழகரை ‘குளிர்விப்பான்’ appeared first on Dinakaran.

Read Entire Article