அனல் காற்று வீசுவதால் வீட்டில் முடங்கும் மக்கள்; 5 மாநிலங்களில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: ராஜஸ்தானில் 114.08 டிகிரி பாரன்ஹீட்

1 week ago 3

புதுடெல்லி: அனல் காற்று வீசுவதால் வடமாநில மக்கள் வீட்டில் முடங்கி வரும் நிலையில், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கோடை வெயில் ெகாளுத்தி வருகிறது. ராஜஸ்தானில் மட்டும் 114.08 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. வட மாநிலங்களில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லியைத் தவிர ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களிலும் உள்ள 21 நகரங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடும் வெயில் காரணமாக மதிய வேளைகளில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

வீடுகளில் இருந்தாலும் புழுக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் வாரத்தில் பல நகரங்களில் வெப்பநிலை 3 முதல் 6.9 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. மேலும், காற்றின் வேகம் குறைந்து வருவதாகவும், குறிப்பாக டெல்லியில் காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து, காலை நேரத்தில் மணிக்கு 8 முதல் 10 கி.மீ ஆகவும், மதியம் மற்றும் இரவு வேளைகளில் தென்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 4-8 கி.மீ ஆகவும் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்சமாக 45.6 டிகிரி செல்சியஸ் (114.08 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. இது ஏப்ரல் முதல் வாரத்தில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும். குஜராத்தின் சில பகுதிகள், குறிப்பாக சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில், வரும் 10ம் தேதி வரை தீவிர அனல் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

The post அனல் காற்று வீசுவதால் வீட்டில் முடங்கும் மக்கள்; 5 மாநிலங்களில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: ராஜஸ்தானில் 114.08 டிகிரி பாரன்ஹீட் appeared first on Dinakaran.

Read Entire Article