அந்தியூர் பகுதியில் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி பெண்களிடம் பண மோசடி

1 week ago 4

*போலீசில் புகார்

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் நேற்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் அரசின் உதவித்தொகைகளான கணவனை இழந்த பெண்களுக்கு விதவை உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை உள்ளிட்டவை பெற்று தருவதாக கூறியுள்ளார். இந்த சலுகைகள் பெறுவதற்காக ஒவ்வொரு பெண்களிடமும் ரூ500 முதல் ரூ10 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளார்.

அவர்களிடத்தில் அரசால் வழங்கப்படும் சில அட்டைகளை கொடுத்து சென்றுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு மேலாக அந்தியூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இதுபோன்று பல பேரிடம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

புகார் கொடுக்க வந்த பெண்கள், தங்களது உறவினர் வீட்டிலும் இதே போன்று பணம் பெற்று சென்றதாகவும் கூறியுள்ளனர். ஒவ்வொரு பெண்களிடத்திலும் வெள்ளித்திருப்பூர், சனிச்சந்தை என்று தனது முகவரியை மாற்றி மாற்றி கூறியுள்ளார். தற்போது, அந்த நபர் கொடுத்த மொபைல் எண் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆரம்ப காலகட்டத்தில் அந்த நபர் பேசிய எண் பேஸ்புக்கில் இருந்து அவருடைய புகைப்படத்தை எடுத்து வைத்துள்ளனர். அவற்றையும் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். தற்போது, அந்த பேஸ்புக்கில் வேறு புகைப்படம் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘‘எங்களின் இழப்பு சிறு தொகையாக இருந்தாலும் மாவட்டத்தில் எந்த பகுதிகளிலும் மற்ற பெண்கள் இதுபோல் ஏமாற்றக்கூடாது என்பதற்காக இந்த புகார் மனுவை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ளோம்’’ என அந்த பெண்கள் கூறினர். இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினர்.

The post அந்தியூர் பகுதியில் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி பெண்களிடம் பண மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article