
லாகூர்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வந்த அவர் இந்த முக்கியான போட்டியில் சதத்தை அடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியை பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "முதலில், விராட் கோலியைப் பற்றி பேசலாம். அவரது கடின உழைப்பை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்க வேண்டும். உலகம் அவர் பார்மில் இல்லை என்று கூறுகிறது, ஆனால் முக்கியமான போட்டிகளில் அவர் அசத்துவதற்காக உலகம் காத்திருக்கிறது. அவரும் எளிதாக பந்துகளை அடித்து ரன் சேர்க்கிறார். நாங்கள் அவருக்கு ரன்கள் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர் சிறப்பாக விளையாடி ரன் அடித்து விடுகிறார்.
தனது உடல்தகுதியை பராமரிக்கும் விதம் மற்றும் தீவிர பயிற்சிக்காக அவரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஏனெனில் அவர் ஒரு கிரிக்கெட் வீரர். நாங்களும் அதே போல் கிரிக்கெட் வீரர்கள்தான். அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்த முயற்சித்தோம். ஆனால் அதனை செய்ய முடியவில்லை. அவர் ஆட்டத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்து விட்டார். ஒட்டுமொத்த உலகமும் அவர் பார்ம் இன்றி தவிப்பதாக சொன்னது. ஆனால் மிகப்பெரிய இந்த ஆட்டத்தில் எல்லாவற்றையும் அவர் சரியாக செய்து விட்டார்" என்று கூறினார்.