
ராவல்பிண்டி,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்துஅணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
நியூசிலாந்து இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவுக்கு இதுதான் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியாகும். அதில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். இவர் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் களமிறங்கிய முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
இதன் மூலம் ஐ.சி.சி.நடத்தும் ஒருநாள் தொடர்களான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்த வீரர் என்ற வித்தியாசமான உலக சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.