அந்த இந்திய வீரர் கெயில், டி வில்லியர்ஸ் போல வரலாம் - மெக்கல்லம் பாராட்டு

2 hours ago 1

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 248 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாகவும் வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த போட்டியில் அபிஷேக் சர்மா பல சாதனைகள் படைத்தார். அதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிகபட்ச ஸ்கோர் (135) பதிவு செய்த வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் (13) அடித்த இந்திய வீரர் ஆகிய வரலாற்று சாதனைகள் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில் பல்வேறு திட்டங்களைப் பின்பற்றி பவுலிங் செய்தும் தங்களுடைய தரமான பவுலர்களை அபிஷேக் சர்மா அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். எனவே அது தாங்கள் பார்த்த சிறந்த சதங்களில் ஒன்று என்று பாராட்டு தெரிவிக்கும் அவர் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், பிஞ்ச் போல அபிஷேக் ஷர்மா வரக்கூடும் என்று கணித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அனைத்திற்கும் முதலாக அபிஷேக் விளையாடியது நாங்கள் பார்த்த ஒரு மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் ஆகும். அவர் சாதாரண பவுலர்களைக் கொண்ட அணியை அடிக்கவில்லை. மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசக்கூடிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சிறந்த லெக் ஸ்பின்னர் நிறைந்த அணியை அடித்துள்ளார். அவர் அப்படியொரு ஆட்டத்தை விளையாடியதை நான் நிதர்சனமாக பார்க்கிறேன்.

சில நேரங்களில் நீங்கள் வெவ்வேறு திட்டங்களை வகுத்து பந்து வீசுவீர்கள். ஆனால் அவர் அப்படி அடித்தால் உங்களால் எந்த திட்டத்தையும் வைத்து நிறுத்த முடியாது. கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் போன்ற குறிப்பிடத்தக்க வீரர்கள் கடந்த காலங்களில் அதைச் செய்ததை நாம் பார்த்துள்ளோம். ஒருவேளை அபிஷேக் சர்மாவும் அந்த வீரர்களில் ஒருவராக வரலாம் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Read Entire Article