லண்டனில் வீற்றிருக்கும் தமிழ் கடவுள்

2 hours ago 1

குன்றுகளிலும், கடலோரத்திலும், சோலைகளிலும், பசுமை வெளிகளிலும் கோவில் கொண்டு குடியிருக்கும் தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமான், தமிழகம் தவிர்த்து தென்னிந்தியாவில் தனிக் கோவில்களிலும், சிவாலயங்களிலும் அருள்பாலித்து வருகிறார். வட இந்தியாவில் கார்த்திக் (கார்த்திகேயன்) என்றும், குமார் (குமரன்) என்றும் வணங்கப்படும் முருகப்பெருமான், கடல் கடந்த அயல்நாடுகளிலும் வணங்கப்படும் தெய்வமாக இருக்கிறார். இலங்கையில் வாழும் தமிழர்களின் இஷ்ட தெய்வமாக கண்டி கதிர்காமனாகவும், மலேசியாவில் மிக உயரமான தோற்றத்தோடு பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் கொண்டப்படும் பத்துமலை முருகனாகவும் காட்சி தருகிறான்.

லண்டன் முருகன் கோவில்

ஆனால் இந்தியாவில் இருந்து சுமார் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ளது மிகப்பெரிய சிறப்பு வாய்ந்தது. மிகப்பழமை வாய்ந்த லண்டன் மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள பிரவுனிங் சாலையில் ஒரு கோவில்.. அதுவும் தமிழக மரபுப் படியே அமைந்திருப்பது பெரும் வியப்பினை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இங்குள்ள ஆன்மிக உணர்வாளர்களின் வெளிப்பாடாக எழுந்த இந்தக் கோவில், தமிழக சிற்பி முத்தையா ஸ்தபதியின் கை வண்ணத்தில், பிரிட்டிஸ் கட்டிட கலைஞர் டெர்ரி பிரீமேன் வடிவமைப்பில் உருவானது.

கோவில் அமைப்பு

ஐந்து நிலை ராஜகோபுரம்.. அதன் உச்சியில் ஏழு கலசங்கள், தோரணங்கள் தொங்கும் வாசல்.. அதை கடந்து உள்ளே நுழைந்ததும் தகதகவென்று மின்னும் கொடிமரம் அமைந்திருக்கிறது. அங்கிருந்து சில அடிகள் முன்னேறிச் சென்றால், முருகப்பெருமானின் வாகனமான அழகு மயில் வீற்றிருக்கிறது. அதன் எதிரே அற்புத தமிழ் கடவுளின் கருவறை அமைந்திருக்கிறது. கருவறையின் உள்ளே வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

கந்தக்கடவுளின் பெரிய கருவறைக்கு வலது புறம், விநாயகப்பெருமான் தனிக்கோவிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த விநாயகர், 'ஆனந்த விநாயகர்' என்ற திருநாமத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமான மூஞ்சுறு வாகனம் உள்ளது. விநாயகர் கருவறை கோஷ்டத்தின் மூன்று புறங்களிலும் பிள்ளையார், லம்போதரர், ஸ்ரீகணபதி ஆகிய உருவங்கள் சிறியதாக சிந்தையைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு சிறப்பு மிக்க அமைப்பாக கருதப்படுகிறது.

அதேபோல மூலவரான முருகப்பெருமான் கருவறையின் இடதுபுறம், சிவபெருமானுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. சிவபெருமான், 'புவனேஷ்வர்' என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா ஆகிய தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சிவன் சன்னிதியில் உள்ள கோ முகத்தின் அருகில் சண்டிகேசுவரர் வீற்றிருந்து, இது சிவாலயம் என்பதை நினைவுபடுத்துகிறார்.

அம்பாள் சன்னிதி

சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தில் அம்பாள் இல்லாமல் இருப்பாரா என்ன? புவனேஷ்வரர் சன்னிதியின் அருகிலேயே, அம்பாளும் புவனேஷ்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். அன்னையின் முகம் இன்முகத்துடன் காணப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்குபவர்களுக்கு, வாழ்வின் துயரங்கள் நீங்கி நன்மை வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

கோவில் சுற்று பிரகாரத்தில் சுவரினை ஒட்டி, வடபுறம் நோக்கிய துர்க்கை அம்மன், முருகனிடம் தமிழ்பெற்ற அகத்திய முனிவர், 'முத்தைத் தரு' என்று திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆகியோர் வடக்கு பார்த்து தனித்தனியே இருக்கின்றனர். கிழக்கு பார்த்தபடி பிரகாரத்தின் கன்னி மூலையில் ஐயப்பன், மூலவருக்குப் பின்புறம் லட்சுமியுடன் வெங்கடேசுவரர், குருவாயூரப்பன் ஆகியோர் அருகருகே இருந்து அருள்பாலிக்கின்றனர்.

வாயு திசை என்றழைக்கப்படும் வடமேற்கு பகுதியில் வாயு புத்திரனான ஆஞ்சநேய சுவாமி வீற்றிருக்கிறார். இது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. திருக்கோவிலின் ஈசானிய இடம் எனப்படும், வடகிழக்கு பகுதியில் நவக்கிரகங்கள், அதற்கு எதிரே மேற்கு நோக்கிய நிலையில் கால பைரவர் ஆகியோர் எழுந்தருளி இருக்கின்றனர்.

இந்தத் திருக்கோவில் நிர்வாகக் குழுவினராக தமிழகத்தைச் சேர்ந்த அன்பர்களே உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள், இந்த ஆலயத்தின் அருகே தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களே இந்த ஆலயத்தின் இறை வழிபாட்டைச் சிறப்புற நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும், இலங்கையில் இருந்து லண்டனில் வசிக்கும் தமிழர்களுக்கும் ஆன்மிக அருள் ஒளியை வழங்கும் திருக்கோவிலாக, இத்தலம் விளங்குகிறது. குஜராத் போன்ற வட இந்திய அன்பர்களும் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர்.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி, மாத கார்த்திகை, சஷ்டி, பிரதோஷம், தைப்பூசம் போன்ற அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆடிக் கிருத்திகை விழா சிறப்புற நடைபெறுகிறது. 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவானது, விநாயகர் பூஜை செய்யப்பட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கும். விழா நடைபெறும் தினங்களிலும், கிருத்திகை அன்றும் இறைவனுக்கு மலர் அர்ச்சனை நடைபெறுகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ளது போல, சப்பரம் எனப்படும் சிறிய தேரில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் லண்டன் மாநகரின் வீதிகளில் உலா வருகிறார். இது தமிழகத்தில் நடைபெறுவது போலவே நடைபெறுவது, நம் பண்பாட்டை பறைசாற்றுவது போல் அமைந்துள்ளது.

விழாவில் உச்சகட்டமாக நடைபெறும் முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சியில், லண்டன் மாநகரில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அப்போது தமிழ்நாட்டு பாரம்பரிய உடைகளே அங்கு மேலோங்கி நிற்கும். திருமணம் முடிந்த பெண்கள் பட்டுப்புடவைகளிலும், திருமணமாகாத பெண்கள் பாவாடை, தாவணியிலும், ஆண்கள் வேட்டி, சட்டையிலும் கலந்துகொள்வது வழக்கம். விழாவின் கடைசி நாளில் தீர்த்தவாரி நடக்கிறது.

Read Entire Article